தேனி மாவட்டம் சின்னமனூர் வஉசி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தொழில் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த உமாராணி மற்றும் அவரது கணவர் ரவிக்குமார்  என்பவர்களிடம் இருந்து மூன்று லட்ச ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மாதாமாதம் வட்டி பணம் முறையாக வழங்கி வந்ததாகவும் இந்நிலையில் உமாராணி மற்றும் ரவிக்குமார் இருவரும் வட்டி பணம் மற்றும் அசல் உடனடியாக வழங்க வேண்டும் என சதீஷ்குமார் இடம் கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ்குமார் தற்போது என்னிடம் பணம் இல்லை வட்டி பணம் முறையாகத்தானே கொடுத்து வருகிறேன் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது உமாராணி மற்றும் அவரது கணவர் ரவிக்குமார் இருவரும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் நீ எல்லாம் ஏன்டா உயிர் வாழ்கிறாய் என தரக்குறைவான வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளனர்.

வட்டி பணம் மற்றும் அசல் பணத்தை முழுமையாக கொடுக்க வேண்டும் என கூறி தொந்தரவு செய்துள்ளனர். சூழ்நிலையால் கந்து வட்டி கொடுமை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை தற்கொலைக்குத் தூண்டிய உமாராணி மற்றும் அவரது கணவர் ரவிக்குமார் இருவர் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்காமல் உள்ளனர் எனவும், மேலும் இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது மூன்று லட்ச ரூபாய் கடனுக்கு வட்டி மட்டுமே 8 லட்சம் ரூபாய் வரை கட்டப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு வட்டி மற்றும் அசல் பணத்தை தருமாறு சதீஷ்குமாரை தொடர்ந்து தொலைபேசி மற்றும் நேரில் தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கந்துவட்டி நபர்களிடம் காவல்துறையினர் பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதால் தனது மகன் சதீஷ்குமாரை தற்கொலை செய்ய தூண்டிய நபர்கள் வெளியே சுதந்திரமாக சுற்றி வருவதாலும் சதீஷ்குமாரின்  தாய் சந்தானம் மனவேதனையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் வருகை தந்து கையில் வைத்திருந்த மண்ணென்னையை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை புடுங்கி அவரை காப்பாற்றினார். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மேலும் அங்கிருந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது நடந்த சம்பவத்தை அவர் காவல்துறையிடம் தெரிவித்ததை தொடர்ந்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.