தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முன்னிலையில்  நடைபெற்றது.




இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பிற மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்குள் போதைப்பொருட்கள் கொண்டு வருவதை காவல்துறையினர் சோதனைச் சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் விழிப்புடன் இருந்து கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல் தெரிய வந்தால் மாவட்ட ஆட்சியர்  மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை வட்டாட்சியர்கள் உறுதி செய்து மாவட்ட ஆட்சியருக்கு  அறிக்கை சமர்பிக்க வேண்டும்.


வருவாய் கோட்டாட்சியர்கள் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள்  விற்பனைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும் பொருட்டு தங்களது கோட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், காவல்துறை கூடுதல் இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கம்),  மற்றும் நுண்ணறிவு பிரிவு (Intelligence)  மூலம் பெறப்படும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு தகுந்த மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும்.




அதேபோன்று, அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகள் அருகில் இயங்கி வரும் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வரும் பட்சத்தில் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள், விடுதி காப்பாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதனை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உள்ளாட்சி துறையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.


கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கள் விற்பனை செய்தல், மதுபானங்கள் விதிமுறைகளை  மீறி விற்பனை செய்தல், அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான புகார்களை 93638 73078 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மற்றும் கட்டணமில்லா தொலைப்பேசி எண். 10581 ஆகிய எண்களை  தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் பாதுகாக்கப்படும்.




உரிமம் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே Rectified Spirit உபயோகப்படுத்தப்பட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை / தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அனைத்து மருந்து கடைகளிலும், மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமம் இரத்து செய்யப்பட்டு, மருந்தக உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 


டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை (BULK SALES) மேற்கொள்ளக்கூடாது. அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய  வேண்டும். மதுபானக் கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்திற்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் பணியாற்ற வேண்டும்.அரசின் விதிமுறைகளை மீறி போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுப்பது குறித்த நடவடிக்கையில் அனைத்துத் துறை அலுவலர்கள் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்தார்.