தேனி: மழையில்லை... வானம் பார்க்கும் பூமி.. கால தாமதமாகும் முதல் போக நெல் சாகுபடி பணிகள்

மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடிக்கு கீழ் சரிந்தது. இந்த நிலையில் முதல்போக நெல் சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Continues below advertisement

தமிழக, கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி அதில், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள  உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்றம் உத்தரவிட்டு 9 ஆண்டுகள் ஆகியும் பேபி அணை பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரம் 707 ஏக்கர் விவசாய நிலங்களின் முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

Continues below advertisement

அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 118.45 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட பிறகு அணை பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழையும் தீவிரம் அடையாமல் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 93 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 302 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 2,069 மில்லியன் கன அடியாக இருந்தது.நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம் அடைந்துள்ளனர். வீரபாண்டி, உப்பார்பட்டி, சின்னமனூர், உள்பட பல இடங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே உழவுப் பணிகள் செய்த நிலையில், இன்னும் நாற்றாங்கால் கூட அமைக்காமல் விவசாயிகள் பலர் உள்ளனர்.

இதனால், முதல்போக நெல் சாகுபடி பணிகள் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணையில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் 19-ந்தேதி நிலவரப்படி அணையில் 130 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு கோடை மழை கை கொடுக்காமலும், பருவமழை தீவிரம் அடையாமலும் உள்ளதால் முதல்போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்வியுடன் வான்மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் அளவை குறைக்கவோ, அல்லது நிறுத்தவோ வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் முல்லைப்பெரியாறு அணையில் 108 அடி வரை மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும். 108 அடி என்பது அணையின் கிடப்பு நீர். 108 அடிக்கு மேல் இருந்தால் தான் அணையின் சுரங்கப் பகுதி வழியாக தமிழகத்துக்கு திறக்கப்படும் மதகுகளுக்கு தண்ணீர் வரும். இன்னும் 9 அடி அளவு வரை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கலாம். அதற்குள் பருவமழை கைகெடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது. எனவே, மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. அதுவரை விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement