பொதுவாக ஆட்டோகளில் 'பிரசவத்திற்கு இலவசம்' என்ற அறிவிப்பு பலகை இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் தேனியை சேர்ந்த 36 வயதான கார்த்திக். இவர் தனது ஆட்டோவில் 'மருத்துவத்திற்கு இலவசம் ' என எழுதி அலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ளார்.




இதன் மூலம் கடந்த ஊரடங்கு காலகட்டங்களிலும் சரி தற்போது ஊரடங்கு தளர்வுகள் அடங்கிய கால கட்டங்களும் சரி  அவரை தொடர்பு கொள்ளும் கர்ப்பிணிகள் , மருத்துவ மனைக்கு செல்வோரிடம் ஆதார் நகல் , சிகிச்சை ஆவணங்கள், டாக்டர் பரிந்துரை சீட்டு பெற்று குறிப்பிட்ட இடங்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறார் . ஆட்டோ ஓட்டும் போது காக்கி சீருடை , கைகளில் கையுறை , முகக்கவசம் அணிகிறார். இவரின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.




இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் கூறுகையில்," கொரோனா காலத்தில் கஷ்டப்படும் பயணிகளுக்காக இச்சேவையைத் தொடங்கினேன். தற்போது வரை 300 க்கும் அதிகமான பயணிகளுக்கு இலவசமாக சேவை வழங்கி உள்ளேன். அவர்கள் தேனி மாவட்டத்தில் எங்கு சென்றாலும் போய் இறக்கி விட்டு வருவேன். செலவுகளுக்கு எனது மனைவியின் நகையை அடமானம் வைத்தே செலவு செய்து வருகிறேன். எனது ஆட்டோவிற்கு 3 மாதம் தவணைக் கட்டவில்லை, வீட்டிற்கு 5 மாதம் வாடகைத் தர வில்லை, ஆனால் வீட்டு உரிமையாளரும், எனது சேவையை பாராட்டி பணம் கேட்டு அழுத்தம் தர வில்லை. மற்ற நாட்களில் மருத்துவ சேவை இல்லாமல் வரும் சவாரி மூலம் கடன்களை அடைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் 'மருத்துவத்திற்க்கு இலவசம் ' என்ற சேவையை வாழ்நாள் முழுவதும் செய்ய போகிறேன்" என்கிறார் ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக்.




ஊரடங்கு காலங்களில் போக்குவரத்து இன்மையால் அவதிப்படுவோர்க்கு மருத்துவ அவசர தேவைக்காக இந்த பணியை தொடங்கிய இவர் தற்போதும் மருத்துவத்திற்காக செல்வோருக்கு இலவசமாக சவாரி கொடுத்து வருவது பல தரப்பினரிடையே பாராட்டை பெற்றுள்ளது.  இவரின் இந்த நற்செயலை பார்த்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இவரை பாராட்டி இவரின் செயலை ஊக்குவித்தார். 


மேலும் படிக்க,


டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!


மீன்பிடி திருவிழாவால் குதூகலம் - காற்றில் பறந்த சமூக இடைவெளி | fish festival | Dindigul |