தேனி பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களைச் சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், விசாரணை நடத்தினார். 


அதில், பெரியகுளம் தாலுகாவுக்குட்பட்ட, வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் சிலர் அபகரித்தது தெரியவந்தது.  


நிலத்தின் அரசு மதிப்பு ரூ.1.44 கோடி எனவும் கணக்கிடப்பட்டது. அதேபோல, தாமரைக்குளத்தில் ரூ.60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 60 ஏக்கர் அரசு நிலம், கெங்குவார்பட்டியில் ரூ.8.62 கோடி மதிப்பில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும் அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்ததும் தெரியவந்தது.


சுமார் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலங்கள் மீட்கப்பட்டு அரசு நிலங்களாக மாற்றப்பட்டன.


இந்த அரசு நிலங்களை ‘அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து, கணினி பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.


அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் தற்போது வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மெகா நில மோசடி வழக்கில் தொடர்புடைய பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை கைது செய்தது சிபிசிஐடி.


2017 முதல் 2019 வரையில் சுமார் 180 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்தது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 180 ஏக்கரில் இருந்த கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.


மோசடி நடைபெற்ற காலக்கட்டத்தில் பணிபுரிந்த வட்டாட்சியர், 2 துணை வட்டாட்சியர்கள், நில அளவையர் உள்பட 7 பேர் கடந்தாண்டு பணியிடமை நீக்கம் செய்யப்பட்டனர்.


பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீது தேனி குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து கடந்த பிப்ரவரியில் அதிமுக பிரமுகர் அன்னப்பிரகாஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த மே மாதத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே, 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 6 மாத்துக்குப் பின் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை கைது செய்தது சிபிசிஐடி. 


தேனி மெகா நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.