தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான ஓடைப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேலான எந்த கால சூழ் நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குனங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பன்னீா் திராட்சை, அண்டை மாநிலமான கேரளம் மற்றும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திராட்சை அறுவடை நடைபெறும்.




இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் தேசிய அளவிலான திராட்சை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டல் தொடர்பாக தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்க கூட்டத்தில் சின்னமனூர் பகுதியை சுற்றியுள்ள திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டனர். காமாட்சிபரத்தில் உள்ள சின்டெக்ட் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனேவில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சோம்குவார் கலந்து கொண்டு திராட்சை விவசாயிகளுக்கு திராட்சை சாகுபடி குறித்து  ஆலோசனைகளை வழங்கினார்.




இதுகுறித்து தேசிய திராட்சை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், கூறுகையில், " தேனி மாவட்டத்தில் அதிகளவில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கம்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திராட்சை விளைச்சல் அமோகமாக இருந்தாலும், சின்னமனூர் பகுதிகளில் திராட்சை விவசாயத்தில்  சில குறைபாடுகளை கண்டுள்ளதாகவும் இதனால் திராட்சையின் தரம் மற்றும் அதன் விளைச்சல் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.  அதனை சரிசெய்ய அப்பகுதி விவசாயிகளுக்கு   அறிவுரையும் வழங்கப்பட்டது. மேலும், மஞ்சரி மெடிக்கா என்னும் புதிய ரக திராட்சையை அந்தப் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் விளைவித்து சோதனை செய்ததாகவும் கூறினார்.




மஞ்சரி மெடிக்கா என்னும் புதிய வகை திராட்சையை கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தங்களின் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைப்படி வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ளதாகவும்,  இந்த வகை திராட்சை ஹெக்டேருக்கு 12 முதல் 15 டன் மகசூல் தருவதாகவும், இதில் வரும் கழிவுகளை வீணாக்காமல் பழச்சாறுக்கு பிறகு, இருக்கும் எஞ்சிய தோல் மற்றும் விதைகள் பிரிக்கப்பட்டு ஐஸ்கிரீம்,  தயிர் போன்ற பால் பொருட்களை வளப்படுத்தவும் ,மிட்டாய் கேக் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.மேலும் வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை சாகுபடி செய்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி அதிக லாபம் தரும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 


''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!