"ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டை சூறையாட வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும்"; என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு, தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் சவால் விடுத்துள்ளார்.


தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக சையதுகான் பத்திரிககையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்தை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது தொடர்பாக கேட்கப்பட்டது.




அதற்கு, அ.தி.மு.க.வினர் பெற்ற வெற்றி என்பது தனிப்பட்ட நபரால் கிடைத்தது அல்ல. கட்சியினரின் ஒற்றுமைக்கு கிடைத்தது. உதயகுமார் முதலில் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிட தயாரா? அவர் மட்டுமின்றி இதுபோல் பேசும் மற்ற நபர்களும் ராஜினாமா செய்து விட்டு போட்டியிட தயார் என்றால், நாங்களும் தயார் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், தேனியில் நேற்று முன்தினம் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் எனக்கூறிவிட்டு 100 சதவீதம் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டுவதற்கான கூட்டமாக நடத்தினர். அதில் கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக ஆர்.பி.உதயகுமார் தன்னுடன் 60 கார்களில் ஆட்களை கூட்டி வந்தார். மேலும் 6 மாவட்டங்களில் இருந்து 200 வாகனங்களில் ஆட்களை கூட்டி வந்து கூட்டம் நடத்தியுள்ளார்.



தேனி மாவட்ட அ.தி.மு.க. இப்போதும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாகவே உள்ளது. ஆர்.பி.உதயகுமார், சசிகலா தயவால் அமைச்சர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து கொண்டார். காலத்துக்கு ஏற்ப அவர் சுயநலத்தோடு முடிவு எடுப்பார். எடப்பாடி பழனிசாமியை சசிகலா தான் முதலமைச்சர் ஆக்கினார். ஆனால், சசிகலாவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று ஆர்.பி.உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் கூறுகின்றனர்.




உண்மையில் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் ஆகிய இருவரும் தான் துரோகிகள். தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாடுவோம் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார். அவர் வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும். சசிகலா, தினகரன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்போம். அவர்கள் ஏற்கனவே அ.தி.மு.க.வினர் தான். ஜெயலலிதாவுடன் வாழ்நாள் முழுவதும் உடன் இருந்தவர் சசிகலா, தினகரன் இருவரும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்பது எனது கருத்து. அவர்களுக்கு என்ன பதவிகள் வழங்கப்படும் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, மாவட்டத்தில் காலியாக உள்ள கட்சிப் பதவிகள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்த கட்சி நிர்வாகிகள் பதவிகளுக்கு புதிதாக நிர்வாகிகளை நியமனம் செய்ய ஏற்பாடு செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.