தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவை சேர்ந்தவர் நித்யா (18). இவர், தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (20). கூலித்தொழிலாளி. உறவினர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் விரக்தி அடைந்த காதலர்கள், தாங்கள் வாழ்வதை விட சாவதே மேல் என்று தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று இரவு காதலர்கள் 2 பேரும் நண்பர் ஒருவரிடம், நாங்கள் ஓடி போய் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று கூறினர். நண்பரின் மோட்டார்சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிய காதலர்கள், பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள தர்மலிங்கபுரம் என்ற கிராமத்துக்கு வந்தனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 2 பேரும், நாங்கள் பஸ்சில் வெளியூர் செல்கிறோம் என்று கூறி நண்பரை அங்கிருந்து அனுப்பி விட்டனர். இதனை அடுத்து காதலர்கள், அந்த கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரும் விஷம் குடித்தனர். சிறிதுநேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து அங்கேயே மயங்கி விழுந்தனர். இந்தநிலையில் இன்று காலை மயக்கம் தெளிந்து பெரியசாமி எழுந்து பார்த்தார். அப்போது நித்யா வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெரியசாமி துக்கத்தால் அலறி துடித்தார்.
பின்னர் அவர் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் அங்கு விரைந்து வந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெரியசாமியும் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்