மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று போல நாய்களுக்கும் 'பார்வோ' என்ற வைரஸ் கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸில் இருந்து நாய்களை காக்க, தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் காற்று மூலம் பரவக் கூடியது. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து அதிகபட்சம் 6 முதல் 8 நாட்களுக்குள் மரணம் ஏற்படும். வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும், தெருவில் சுற்றும் நாய்களுக்கும் வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. ஒரு நாய்க்கு இந்த வைரஸ் தொற்றிக் கொண்டால் அந்தத் தெருவில் உள்ள நாய்கள் முழுவதுக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் . இந்த வைரஸின் அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு, சாப்பிடாமல் இருப்பதுபோன்ற அறிகுறிகள் தென்படும். முதல் சில நாட்களில் சரியான சிகிச்சை மேற்கொண்டால் காப்பாற்ற முடியும் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.
பூஸ்டர் தடுப்பூசி அவசியம் :-
தேனி மாவட்டம் உள்ள கம்பம் கால்நடை உதவி மருத்துவர் ராஜா மோகன் கூறுகையில், ”கொரோனா போன்றதுதான் பார்வோ வைரஸ் தாக்குதலும். இந்த வைரஸால் பல நாய்கள் உயிரிழந்துள்ளன. பிறந்து 30 நாட்கள் முதல் ஒரு வயது ஆகும் நாய்களுக்கு மட்டுமே இந்த வைரஸ் பரவும். பெரிய நாய்களை தாக்காது. பிறந்து தாயை விட்டு பிரியும் போது அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அப்போது இந்த வைரஸ் எளிதாக தாக்கும். மழைக்காலங்களில் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. இதை தடுக்க 30 முதல் 45 நாட்களுக்கு உள்ளேயே நாய் குட்டிக்கு தடுப்பூசி போடவேண்டும். பெரும்பாலானோர் வீட்டில் செல்லப் பிராணிகளாக வெளிநாடு வகை நாய்களை வளர்க்கின்றனர்.
இந்த வெளிநாட்டு வகை நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும். இதனால் இந்த வைரஸ் எளிதில் தாக்கும். நாட்டு நாய்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக இருப்பதால், வைரஸ் பரவுவதில் வேகம் சற்று குறைவாக இருக்கும். ஆனால் நாட்டு நாய்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வைரஸுக்கு தனியாக தடுப்பூசி ஏதுமில்லை. இந்த பார்வோ வைரஸ் உட்பட 7 வைரஸ் நோய்களுக்கு ஒரே தடுப்பூசி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல் தடுப்பூசியை போட்டதிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு பூஸ்டர் எனப்படும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டால் இரட்டை பாதுகாப்பு அடுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள் .
மனிதர்களை தாக்குமா?
மேலும் இந்தப் பார்வோ வைரஸ் நாய்களை மட்டுமே தாக்கும் என்பதால், மனிதர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் ரேபீஸ் எனப்படும் நோய் மட்டும் மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. ரேபீஸ் நோய் என்பது பொதுவாக மூளையைத் தாக்கக்கூடிய நோயாகும். இதனால் நாய்களுக்கு வெறிபிடிக்கும். இந்த ரேபிஸ் நோய் தாக்கிய நாய்கள் மனிதனை கடிக்கும் பட்சத்தில் மனிதனுக்கும் இந்த ரேபிஸ் நோய் தாக்கி வெறிபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நோய் மனிதர்களை தாக்கினால் காப்பாற்ற முடியாத சூழலில் கூட உருவாகும் என்கிறார்.