பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூபாய் ஒரு கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதன் எதிரொலியாக நாடு முழுவதும் பொதுமக்களை பாதுகாக்க சுற்றுலா தலங்கள் வணிக தலங்கள் உட்பட அனைத்து ஆன்மீக ஸ்தலங்களும் மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 2 வருடங்களாக மூடப்பட்ட கோவில்கள் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை மாதம் கடந்த 5ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. தங்கத்தேர், ரோப்கார் போன்றவை இயக்கப்படாத நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
இதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 250 கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 112 கிராமும், வெள்ளி 1,125 கிராமும் கிடைத்தது. பல்வேறு நாட்டு கரன்சிகள், நாணயங்களும் நிறைய கிடைத்தன. ஊரடங்கு விதிகள் தளர்வுகள் கொடுக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பழனிக்கு வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்ககுறைந்த அளவே பக்தர்களை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிமாதத்தால் பழனி முருகன் கோவிலுக்கு வரும்பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பக்தர்கள் வருகை அடிப்படை, விழாக்கால நேரத்தை பொறுத்து மாதந்தோறும் உண்டியல் காணிக்கைகளை எண்ணப்படுவது வழக்கம் அந்த அடிப்படையில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு பின் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் வருக அடிப்படையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். வழக்கமாக வரும் உண்டியல் காணிக்கை வருமானத்தை விட தற்போது குறைந்த காணிக்கை பணம் வந்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். பழனி தங்கும் விடுதிகளுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
கேரள பெண் பாலியல் நாடகத்தின் எதிரொலி : பழனியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை..!