பருவ மழை அதிகரிப்பால் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளில் நீர் வரத்து அதிகரித்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.




இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 135.60 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 969 கன அடியாக காணப்பட்டது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.75 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 272 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1,822 கன அடியாகவும் உள்ளது.


அதேபோல போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. பின்னர் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தபடி இருந்தது. தொடர் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் சீராக சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் நேற்று பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் போடி முந்தல் சாலையில், கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது போன்று தடுப்பணையில் தண்ணீர் செல்லும் எழில் கொஞ்சும் காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


அதேபோல ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக போதிய அளவு மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் குறைந்த அளவில் மட்டும் நீர்வரத்து இருந்தது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை திடீரென்று ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.




இருகரைகளையும் தொட்டபடி தற்போது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் போது மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போதே மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.


பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது, கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில தினங்களாக, கொடைக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அருவியில் சீராக தண்ணீர் விழுந்தது.



இந்தநிலையில் நேற்று இரவு மற்றும் இன்று காலை வரையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அந்த தடையானது இன்றும் தொடர்ந்து வருகிறது. இதையொட்டி அருவிக்கு செல்லும் வாசலின் முன்பக்க கதவு மூடப்பட்டது. மேலும் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரான பிறகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.