தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற முத்துக்கண்ணன் (49). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அங்காளஈஸ்வரி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துக்கண்ணன் குடிபோதையில் வந்து அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்காளஈஸ்வரி தனது கணவரை பிரிந்து, அதே ஊரில் உள்ள தனது தம்பி சங்கிலி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  இந்தநிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கிலியின் வீட்டுக்கு முத்துக்கண்ணன் சென்றார். தனது மனைவி பிரிந்து சென்றதை மனதில் வைத்துக் கொண்டு அவர் சங்கிலியிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 



 

இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் சங்கிலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முத்துக்கண்ணன், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி தனது மனைவியை தேடி சங்கிலியின் வீட்டுக்கு சென்றார். அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்காளஈஸ்வரியுடன் தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்து இருந்த திருப்புளியால் அங்காளஈஸ்வரியை குத்தினார். பின்னர் சுத்தியலால் அவரை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதை தடுக்க வந்த சங்கிலியையும் தாக்கிவிட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 



 

படுகாயம் அடைந்த அங்காளஈஸ்வரியை அவருடைய உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இந்த கொலை குறித்து சங்கிலி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த முத்துக்கண்ணனை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார்.



 

மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  மேலும், கொலை செய்யும் நோக்கில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், சங்கிலியை தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து முத்துக்கண்ணனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.