பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக புதிதாக இரண்டு மடங்கு பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூபாய் 3 கோடியே 40 லட்சம் கள்ள நோட்டுகள் , ரூபாய் 15 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப் பணம், சொகுசு கார்கள் செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை ஆவடியைச் சேர்ந்த தவச்செல்வம் என்பவர் கடந்த 26.06.2024 அன்று தேனியைச் சேர்ந்த சில நபர்கள் 500 ரூபாய் தாள், ஒரு லட்சம் கொடுத்தால், ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம் மதிப்பிற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் தருவதாக சென்னையில் இருந்து தன்னை வரவழைத்து ரூ.10,75,000 பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து கடந்த 27.06.2024 அன்று மனு ரசீது 628/24 போடப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த நபர்கள் தன்னை தொடர்பு கொண்டு பழைய 2000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 1 லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு புதிய நோட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்ததாக தேனி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதன் பேரில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக உள்ள ஒரு வீட்டிலிருந்து சொகுசுக் காரில் கட்டுக் கட்டாக பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் நேற்று இரவு தேனி சிவாஜி நகர் பகுதியில் சென்ற ஸ்கார்பியோ சொகுசு காரை போலீசார் மடக்கி சோதனை செய்த போது, அந்தக் காரில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
காரை ஓட்டி வந்த கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவரது மகன் சேகர்பாபு (45)என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில்,பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பரமராஜ் என்பவரது மகன் கேசவன் (36) க்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்து அவரையும் கைது செய்தனர்.இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி வாடிக்கையாளர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, செல்போன்களை பறித்துக்கொண்டு அவர்களை மிரட்டி ஏதாவது ஒரு தனி இடத்தில் இறக்கிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது.
இருவரிடமிருந்தும் ரூபாய் மூன்று கோடியே 40 லட்சம் மதிப்பிற்கு 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் (கலர் ஜெராக்ஸ் என்று கூறப்படுகிறது) மற்றும் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப் பணம்,16 செல்போன்கள், ஸ்கார்பியோ கார் உள்ளிட்ட மூன்று சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து இன்று தேனி நகர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், கள்ள நோட்டுகள் மற்றும் சொகுசு கார்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை செய்தியாளர்களிடம் கூறினார்.
பிடிபட்ட 16 செல்போன்களில் ஒன்று ஆவடியை சேர்ந்த தவச்செல்வம் என்பவருடைய செல்போன் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவரிடமிருந்து ரூபாய் 10,75,000 பறித்துக்கொண்டு மோசடி செய்த கும்பலும் இவர்கள்தான் என தெரிய வந்தது. இது தவிர மேலும் 15 செல்போன்களுக்கு உரிய உரிமையாளர்கள் யார்? அவர்கள் இந்த கும்பலிடம் எத்தனை கோடி பறிகொடுத்துள்ளார்கள்? என போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.