தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்க  ஆதரவு தெரிவிக்கிறோம் என தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் கடந்த 6-ஆம் தேதி, விரைவில் கூடவுள்ள பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ள 'எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு" என்ற வாசகங்களுடன் அடங்கிய போஸ்டர்  ஒட்டப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.




இது தொடர்பாக போஸ்டரை ஒட்டிய பெரியகுளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற நபர் மீது அதிமுக, தேனி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையிலான அதிமுகவினர் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த நபர் அமமுகவைச் சேர்ந்தவர் என்றும், தான் செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கோரியதால் பிரச்சனையை முடித்து வைக்கப்பட்டதாகவும் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தெரிவித்தார்.




இந்த நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23-ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட உள்ளது. அதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்களுடன் செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து நிர்வாகிகளும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என்று பேசியதாகவும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.




இந்நிலையில், "அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வணங்குகிறோம், அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் ஒற்றைத் தலைமையே, எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பின் மூன்றாவது தலைமையே" என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தேனி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.  தேனி நகரம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் ஒன்றியக் கழகம் சார்பாகவும், தனிப்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாகவும் போஸ்டர்கள் தயார் செய்யப்பட்டு தேனி, போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண