முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கவும் பராமரிக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையில் மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
பின்னர் இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு குழுவினர் பருவ மழை காலங்களில் அணை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வர். அதன்படி தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 136 அடியை எட்ட உள்ளது.
இந்நிலையில் மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழகத்தின் பிரதிநிதிகளான பெரியார் கோட்ட சிறப்பு செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரளாவின் பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிகுமார் மற்றும் உதவி பொறியாளர் பிரஷீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக காலை தேக்கடியில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் படகு துறையின் இரு படகுகள் முலம் அணை பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதில் பிரதான அணை, பேபி அணை, நீர்வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் மற்றும் நீர் கசிவு, ஷட்டர் இயக்கங்கள், கேலரி பகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து மாலை குமுளியில் உள்ள ஒன்றாம் மைல் கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை முதன்மை கண்காணிப்பு குழுவிடம் இந்த துணைக்குழுவானது சமர்ப்பிக்கும்.
இதற்கு முன்பாக துணைக் கண்காணிப்பு குழு கடந்த பிப். 25 ஆம் தேதியும், முதன்மை கண்காணிப்பு குழு கடந்த மே.9 ஆம் தேதியும் ஆய்வுகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 135.90 (142) அடியாகவும், நீர் வரத்து 1879 கன அடியாகவும் உள்ளது. மேலும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1,867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்