தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. யூனியன் சேர்மன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் என்பவர் யூனியன் சேர்மனாக உள்ளார். துணை சேர்மனாக அதே கட்சியைச் சேர்ந்த மூக்கம்மாள் கெப்புராஜ் என்பவர் உள்ளார். தலைவர், துணை தலைவர் உள்பட அ.தி.மு.க கவுன்சிலர்கள் 7 பேர் உள்ளனர். தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர். ஒன்றியக்குழு கூட்டம் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடத்தவில்லை என்றும், அ.தி.மு.க. தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில்.
இதையடுத்து கடந்த மாதம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த துணைத் தலைவர் உள்பட 5 கவுன்சிலர்களும் தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் கலந்து கொண்டு தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் இணைந்து, யூனியன் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் தலைவர் மீது கவுன்சிலர்கள் கூறிய புகார்களையும் மனுவாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ கவுசல்யாவுடம் வழங்கினார்கள். இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்ற நிலையில், தேனி ஏ.டி.எஸ்.பி.சங்கரன், உத்தமபாளையம் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உத்தமபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீர்மான கூட்டத்தொடர் நடைபெறும் போது அதிமுகவினரும் திமுகவினரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெளியே ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த தீர்மான எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக ஆர்டிஓ கௌசல்யா இரண்டு அடுக்கு பாதுகாப்பை விதித்தார்.
நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு தீர்மானம் முடிவடைந்த போதும் கவுன்சிலர்களை வெளியே விடாமல் அடைத்து வைப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டினர். தீர்மானத்தின் தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகாத காரணத்தினால், உத்தமபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திமுகவினருக்கு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அதிமுகவின் கவுன்சிலர்களை திமுகவினர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்வதாகவும், அதிமுகவின் கவுன்சிலர்களை திமுகவினர் கடத்தி செல்வதாக அதிமுகவினர் கூறினர். இந்த சூழலில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அணைப்பட்டியைச் சேர்ந்த திருமதி, ஜான்சி வாஞ்சிநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பதவியை தனது சொந்த அலுவல் பணி காரணமாக ராஜினாமா செய்வதாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆர்டிஓ கௌசல்யா கூறுகையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் 10 கவுன்சிலர்களின் 9 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு முடிவு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவுகள் அரசின் சார்பாக விரைவில் வெளியிடப்படும். என்றார்.
’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!