இந்தியாவின் பெரும்பாலான நீர்த்தேவையை பூர்த்தி செய்வதில் தென்மேற்கு பருவமழை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  முக்கிய மழை பருவமான, தென் மேற்கு பருவ மழை வழியாகவே, நாடு முழுவதுக்கும் தேவைப்படும் நீரின் அளவு பெரும்பாலும் பூர்த்தியாகிறது. வேளாண்மை மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், தென் மேற்கு பருவ மழையையே நம்பியுள்ளன. தென் மேற்கு பருவமழையால் கேரள, கர்நாடக மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் அதிகமாக பலன் பெற்றாலும், இந்த இருமாநிலங்களிலும் பெய்யும் மழையானது ஆறுகள் வழியாக தமிழ்நாட்டை வந்தடைகின்றன. இந்த ஆண்டுக்கான மழை நிலவரம் குறித்த, நீண்ட கால கணிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்து இருந்தது அதன்படி, ஜூன் ஒன்றாம் தேதி தென் மேற்கு பருவ மழை துவங்கும் என்றும், ஆகஸ்ட் மாதம் வரை பொழியும் தென்மேற்கு பருவமழையானது இயல்பான அளவில் இருக்கும் என கணித்திருந்தது. 



தென்மேற்குப் பருவ மழை வாயிலாகத்தான் தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் நீரின் தேவை பூர்த்தியாகிறது எனலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால், விவசாயம் செழிப்பதுடன், முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை,  சோத்துப்பாறை அணை என பல அணைகளும், ஏரி,  குட்டை, குளம் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழியும்.  கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் தேதி தொடங்கும். ஆனால் இந்தாண்டு காலநிலை மாறி முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கியது. 



இந்த தென்மேற்குப் பருவமழையின் மூலம், தேனி மாவட்டத்திலுள்ள அணைகள் நிரம்பும். இதனை நம்பி தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்வர். ஆனால் சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை, சற்றுக் காலநிலை மாறி மாறி மழை பெய்து வருவதால், தேனி மாவட்ட விவசாயிகள்,  அதிலும் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இருபோகம் நெல் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.



முறையான மழைப்பொழிவு இல்லாததாலும் முல்லைப் பெரியாறு அணையில் உரிய நீர்த் தேக்கத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தாமல் இருப்பதும், இதற்கு காரணமாக தெரிவிக்கின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீதிமன்ற உத்தரவுபடி 142 அடி உயர்த்த வேண்டும் என்ற ஆணை உள்ளது.  ஆனால் அம்மாநில அரசு அதனை பொருட்படுத்தாமல், 138 அடி  வரை மட்டுமே அம்மாநில அரசு அதிகபட்சமாக நீர்மட்டத்தை வைத்துள்ளது. அணையின் நீர்மட்டம் 138 அடி நெருங்கியதும்,  அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும். இதனால் தேவையான நேரத்தில் இரு போகம் நெல் சாகுபடி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்.



இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், " கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரதானமாக நெல் விவசாயமே உள்ளது. நெல் விவசாயத்தில் நீரின் பங்கு இன்றியமையாதது. முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டம் தேவையான அளவு உயர்த்தாமல் இருப்பதும்,  பருவநிலை மாற்றத்தால் மழை அளவு குறைந்துள்ளதாலும், மற்றும் உரம் விலை உயர்வு, தேவையான நெல் ரகத்தை தேர்ந்து எடுப்பதில் சிக்கல், வியாபாரிகள் மூலம் உரிய விலை கிடைக்காமல் இருப்பது, போன்ற பல சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்தை கைவிடும் நிலையிலும்  அல்லது ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யக் கூடிய ஒரு அவல நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். எனவே தமிழக அரசு முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்யவும், தேவையான நேரத்தில் அணையில் இருந்து நீர் திறந்து விடவும் கோரிக்கை வைத்துள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 


''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!