சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் (47). இவர் வாகன ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி கிருஷ்ணமாலா. இந்த தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்ஸன் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்து, அதன்படி அவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 2 பேருடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு காரில் நேற்று முன் தினம் சுற்றுலா வந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அருவியியை சுற்றியுள்ள இடங்களை கண்டு களித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்தனர். இதைத்தொடர்ந்து பெமினா உள்பட 6 பேரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். வென்னியாறு பாலம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது. இதில் தலையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே பெமினா பரிதாபமாக இறந்தார். தங்களுடன் நடந்து வந்த பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பெமினாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் சோகப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெமினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுருளி அருவிக்கு சுற்றுலா வந்தபோது மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து இறந்த மாணவியின் தந்தை நிக்ஸ்ன கூறுகையில், “சுற்றுலா வந்த இடத்தில் எனது மகள் இறப்பு என்பது எனக்கும் எனது குடும்பத்திற்கும் பேர் இழப்பாக உள்ளது. இறந்த எனது மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தங்களை அதிகாரிகள் அலைக்கழித்தனர். பிரேத பரிசோதனை செய்த பின்பும் கூட உடலை வைக்க குளிர் சாதன பெட்டி இல்லாத ஆம்புலன்ஸ்சில் ஏற்றியதும் தனது சொந்த ஊருக்குள் வருவதற்குள் 3 மாவட்டத்தில் மாற்றி மாற்றி எனது மகளின் உடலை வேறு வேறு ஆம்புலன்ஸ்சில் மாற்றியதும், நாங்கள் இறந்த எனது மகளின் உடலை வைத்து மிகவும் அலைக்கழிக்கப்பட்டோம்” என மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
குறிப்பாக தனது மகள் உடலை ஏற்றி வந்த எந்த ஆம்புலன்ஸ்சிலும் குளிர்சாதனப்பெட்டி இல்லாததால் உடல் சிதைந்ததாகவும் இதனால் தாங்கள் பெரும் சிரமத்திற்குள்ளானதாக குற்றம் சாட்டியுள்ளார். சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு கொடுக்கும் நிவாரணத்தை கூட தாங்கள் கேட்கவில்லை. ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்று விபத்தில் இறந்த தனது மகளுக்கு அங்கு சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கூட ஒரு ஆறுதலோ எந்த ஒரு மரியாதை கூட செய்யவில்லை என மிகவும் வருத்தமாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்