நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசியை வருவாய் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி கடத்திய இருவரை கைது செய்துள்ள நிலையில் மேலும் 4 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.




தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக ரேசன் அரிசியை நாள்தோறும் கடத்தப்பட்டு பெரியகுளம் பகுதியில்  உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டும், பின்பு  ரேசன் அரிசியினை பட்டை தீட்டுவதற்காகவே செயல்பட்டு வரும் ரைஸ்மில்களில் அவை குருனையாகவும், மாவாகவும் அரைக்கபடுவதும், அவ்வாறு அரைக்கபடும் ரேசன் அரிசி மீண்டும் தனித்தனி வீடுகளில் பதுக்கி வைத்து பின்பு டன் கணக்கில் சேர்ந்ததும், அவைகளை லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்வதும் போலீசாருக்கு தெரியவந்தது.


இந்த நிலையில், பெரியகுளம் வட்டாட்சியர் காஷா ஷெரிப்பிற்கு அரிசி கடத்தல் தொடர்பாக ரகசிய புகார் வந்தது.  இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திற்கு சென்ற போது  லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி லாரிகளில் ஏற்றப்படுவதை கண்டு கையும் களவுமாக பிடித்தார்.




லட்சுமணன் வீட்டில் 100க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பதும் கண்டுபிடிக்கபட்டது. மேலும் பெரியகுளம் பகுதிகளில் ரேசன் கடைகளில் இருந்து கடத்தபட்டு அவை வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு அவை பட்டை தீட்டப்பட்டு அரிசிகள் எல்லாம் லாரியில் ஏற்றி விட்டு கடைசியாக லட்சுமணன் வீட்டிற்கு வந்து லாரியில் ரேசன் அரிசியை ஏற்றும் போது இவை பிடிபட்டது.


மிகப்பெரிய அளவிற்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் நடத்துள்ளதை அடுத்து சம்பவ இடத்திற்கு பெரியகுளம் காவல்துறை துனை கண்கானிப்பாளர் கீதா சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தினார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த லட்சுமணன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியின் ஓட்டுநர் சத்யநாராயனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யபட்டது. மேலும் ரேசன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரிடம் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.




இந்நிலையில் ரேசன் அரிசி ஏற்றிய லாரியை உத்தமபாளையம்  குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும்போது லாரியின் ஓட்டுனர் ரேசன் கடைகளில் பயன்படுத்தப்படும் சாக்கினை தூக்கி சாலையில் எறிந்ததும் அதனை பொதுமக்கள் கண்டுபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் குறித்து  பெரியகுளம் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி பாலமுருகன் கூறுகையில், அரிசி கடத்தல் சம்பந்தமாக ரேசன் கடைகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேனி மாவட்டத்தில் அரிசி கடத்தல் தங்கு தடையின்றி நடந்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண