தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது கம்பம் நகராட்சி. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 1வது வார்டு பகுதி கோம்பை ரோடு பகுதியாகும்.  நேற்று காலை கோம்பை ரோடு குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டுள்ளது. கோம்பை ரோடு பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவரது வீட்டின் அருகே பறவைகள் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கண்டு என்ன இருக்கிறது என்று அப்பகுதியில் உள்ள புதரில் சென்று பார்த்துள்ளார். அப்போது திடீரென ஆக்ரோஷமாக சிறுத்தை ஒன்று அவரை தாக்க பாய்ந்துள்ளது. நூல் இழையில் ஈஸ்வரன் உயிர் தப்பி உள்ளார். நாய்கள் குறைக்க அங்கிருந்து சிறுத்தை தப்பி ஓடி மற்றொரு புதர் பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளது.

Continues below advertisement

இந்நிலையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோருக்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அளிக்க அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ஈஸ்வரன் கூறிய பகுதியில் சிறுத்தை உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தேடி சென்றபோது அங்கு இருந்த சிறுத்தை திடீரென வனத்துறை வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியன் என்பவரை புதருக்குள் ஒளிந்திருந்த சிறுத்தை திடீரென தாக்கியது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

Continues below advertisement

இதனை கண்ட மற்ற வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேறினார். அந்தப் பகுதியை சுற்றிலும் தற்போதுவரை வனப்புறையினர் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

யாரும் வீட்டை விட்டு வெளி வர வேண்டாம் எனவும் சிறுத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தற்போது வரையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரோன் கேமராக்களை கொண்டும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டும் சிறுத்தை நேற்றைய தினம் பதுங்கி இருந்த பகுதியில் மீண்டும் வனத்துறையினர் இண்று இரண்டாவது நாளாக  தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்றைய தினம் இரவு வரை சிறுத்தை இருக்கும் இடத்தினை கண்டறிய முடியவில்லை.

இரவு நேரம் காரணமாக ட்ரோன் கேமராக்களை மட்டும் வைத்து சிறுத்தை பதுங்கி இருந்த பகுதி முழுவதும் தீவிரமாக தேடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் காலை முதல் சிறுத்தை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரோன் கேமராக்கள் கொண்டு சிறுத்தை பதுங்கி இருந்ததாக கண்டறியப்பட்ட பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தை பதுங்கி இருந்த பகுதி முழுவதும் புதர் மண்டி கிடப்பதால் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அந்தப் பகுதியினை தற்போது சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் இந்த பகுதியில் இருந்து இருந்த சிறுத்தையானது இடம்பெயர்ந்து வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம் என வனத்துறையினர் யூகிக்கின்றனர் எனினும் தொடர்ந்து இந்த பகுதி முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.