இந்தியாவில் கொரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் ஒற்றை ஆளாக செல்கிறார் மாற்றுத்திறனாளியான சுரேஷ் .
ஐயப்பன் திருக்கோவில் :-
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உலக புகழ்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வது உண்டு.
இக்கோவிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து, உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கடும் விரதத்தை மேற்கொண்டு கோவிலுக்கு செல்வர்.
இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தில் செல்வது மட்டுமல்லாமல், சில ஐயப்ப பக்தர்கள் இறைவனை வேண்டி பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்கு செல்வதும் உண்டு. பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதலும், இறை பக்தியும் இருக்கும்.
தன்னம்பிக்கை :-
ஆனால் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் நலமுடன் இருக்க வேண்டியும், கொரோனா தொற்று இந்தியாவில் முழுமையாக ஒழிய வேண்டும் என்று சபரிமலை ஐயப்பனை வேண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டருக்கும் மேல் இரு மாநிலத்தை கடந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் தனியாக செல்கிறார் மாற்றுத்திறனாளியான சுரேஷ்.
அதன்படி மூன்று மாதங்களுக்கு முன் நெல்லூரில் இருந்து சபரிமலை பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த பயணத்திற்கான செலவுகளை அங்குள்ள ஐயப்ப பக்தர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நிதி உதவி அளித்துள்ளனர்.
ஒற்றை ஆளாக ஒற்றைக் காலுடன் நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் நபரை கண்டு பலரும் வியந்து பாராட்டியும் வருகின்றனர்.
இறைபக்தி :-
இது குறித்து சுரேஷ் கூறுகையில், " சிறு வயதிலிருந்தே கடவுள் பக்தி கொண்டவன் நான். ஆந்திர மாநிலத்தில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். கொரோனா தொற்று இந்தியாவில் அழிய வேண்டும் என்ற நோக்கில் சபரிமலை பயணத்தைக் வெங்கடாசலபதி மீதும் சபரிமலை ஐயப்பன் மீது பாரத்தைப் போட்டு நடை பயணமாக சபரிமலைக்கு செல்கிறேன். முழுக்க முழுக்க எனது கடவுள் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளேன்" என்றார்.