அனைத்து சமுதாய பிரதிநிதிகள் 16 நபரை உள்ளடக்கிய ஆலோசனை குழு அமைப்பு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஏற்கனவே ஆட்சியர் தலைமையில் இயங்கி வரும் 9 உறுப்பினர்கள் கொண்ட அரசுத் தரப்பு 'ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழு'வில் 10வது நபராக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேர்ப்பு கூட்டம் நிறைவடைந்து வெளியே புறப்பட்டபோது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் - மோதல் நிலவியதால் பரபரப்பு.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது. ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்தகோரிய வழக்கின் உத்தரவில் அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த உத்தரவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் பிரதௌஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் காலை 11மணிக்கு தொடங்கி மதியம் 1மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் அவனியாபுரம் கிராமத்தை அனைத்து சமுதாய பிரதிநிதிகள் 16 நபரை உள்ளடக்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம் எனவும், இதேபோன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கி வரும் 9 உறுப்பினர்கள் கொண்ட அரசுத் தரப்பு 'ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழு'வில் 10வது நபராக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து சமாதான கூட்டம் முடிவடைந்து இரு தரப்பினரும் வெளியவந்த போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கு மற்றொரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் தனியேதனியே பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர். சமாதான கூட்டத்தில் முடிவு எட்டப்பட்ட நிலையிலும் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அவனியாபுரம் பகுதியில் அதிகளவிற்கு காவல்துறையினர் குவித்துவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்