சிக்கந்தர்சாவடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய கொடியை ஏற்றி திருவிழாவை இந்துக்கள் துவக்கி வைத்தனர். மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக நடைபெறும் விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள ஸ்ரீமந்தையம்மன் கோயில் சக்தி கரகம் எடுக்கும் விழா பல்வேறு தடைகளுக்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின்  நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறும் இவ்விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடத்தப்படுவது வழக்கம்.  அந்த வகையில் நேற்று இன்று மாலை விழாவின் துவக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.



 

இதில் இஸ்லாமிய கொடிக்கம்பத்தை ஊர்வலமாக எடுத்து சென்று பின்னர் கோயில் முன்பாக இஸ்லாமிய கொடியை ஏற்றி விழா துவங்கப்பட்டது. இப்பகுதியில் பல்வேறு ஜாதி மதத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் நிலையில் அனைவரிடமும் எந்தவித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் சிறப்பாக இஸ்லாமியர்களும் இணைந்து விழாவை கொண்டாடுவதால் இஸ்லாமியர்களை பெருமைப் படுத்தும் விதமாக இஸ்லாமிய கொடியேற்றி விழா துவக்கப்படுவது பண்டைய காலம் தொட்டு நடைமுறையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சக்தி கரகம் எடுப்பது, முளைப்பாரி எடுப்பது என பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.



 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல வருடங்களுக்கு பின் இந்த திருவிழாவை கொண்டாடுகிறோம். இந்து - முஸ்லிகளின் ஒற்றுமையை கொண்டு செலுத்தும் விதமாக, திருவிழா முக்கிய நிகழ்வு நடைபெறுவது சிறப்பு மிக்கது. ஆண்டு தோறும் இந்த திருவிழா உற்சாகமாக நடைபெற வேண்டும் என ஆசைப்படுகிறோம். தொடர்ந்து ஐந்து நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.