வரும் ஏப்ரல் 16ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா நடைபெற உள்ள நிலையில் தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு செல்ல தமிழக அரசு சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக எல்லை பகுதியில் மதுரையை நோக்கிவாறு கோயில் அமைந்துள்ள நிலையில் கண்ணகி கோயிலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கேரள அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


 



 


மங்கலதேவி கண்ணகி கோயில் 


தனது கணவனை இழந்த கண்ணகி பாண்டியனையும், மதுரையையும் அழித்துவிட்டு மிகுந்த வெறுப்புணர்வுடன் மதுரையின் மேற்கு வாயில் வழியாக மனமுடைந்த நிலையில் தன்னந்தனியாய் மாமதுரையை விட்டுப் புறப்படுகிறாள். (சிலம்பு 53:183) அதன் பின்னர் வையை ஆற்றின் தென் கரையைப் பற்றி மேற்கு நோக்கி நடக்கிறாள் (சிலம்பு 23:185). அவ்வாறு நடந்தவள் வையை ஆறு பரவிப்பாயும் இடமாகிய சுருளிமலைத் தாழ்வாரம் தொடராம் நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து ஏறி வந்து (சிலம்பு 23:190), மலை மீது இருந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் மூங்கில் புதர்கள் அடர்ந்த வேங்கைக் கானலில் வந்து நின்று (சிலம்பு 23:191) தெய்வமாகிறாள் (சிலம்பு 24:3). இத்தகையக் காட்சியினைக் குன்றக் குறவர்கள் நேரில் கண்டு அவளைத் தெய்வமாகப் போற்றினர் (சிலம்பு 24: 14, 15). குன்றக் குறவர்கள் இக்காட்சியினை மலைவளம் காண்பதற்காக வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூறினர். மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குன்றக் குறவர்கள் கூறியதைத் தாமும் கண்டதாகக் கூறினார். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவனும் அவன் மனைவியும் கண்ணகிக்குக் கோயில் கட்டத் தீர்மானிக்கின்றனர். அதற்காக இமயமலை சென்று அங்கிருந்து கல்லெடுத்து வந்து இக்கோயிலை அமைத்தான் என்பது செவிவழி செய்தியாக கூறப்படும் செய்தி


கோயில் அமைவிடம் 


தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து கூடலூர் அருகே உள்ள வண்ணாத்திப்பாறை, தமிழக - கேரள எல்லை பகுதியான பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள மங்கலதேவி மலையில் சுமார் 4,830 அடி உயரத்தில் கண்ணகி கோயில் உள்ளது. 1975 ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த அனந்த பத்மநாபன், அறநிலையத்துறை ஆணையர் ஆர்.சி.பண்டா, நில அளவை தலைமை இயக்குனர் முருகேசன் ஆகியோர் கேரள மாநில அதிகாரிகளுடன் மலைப்பாதை வழியாக கண்ணகி கோயிலுக்கு சென்று கோயில் நிலத்தை அளந்து இக்கோயில் தமிழக எல்லையில் இருப்பதை ஆவணங்களின் வழியாக உறுதிப்படுத்தினர்.




சாலை அமைக்க நினைத்த கருணாநிதி


கண்ணகி கோயிலுக்கு தமிழகத்திலிருந்து செல்ல, கூடலூர் அருகேயுள்ள  பளியன்குடி பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக சுமார் 6.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது. அதன்படி பளியன்குடியிலிருந்து அத்தியூத்து வழியாக கோயில் வரை இருந்த நடைபாதையில் சாலை அமைக்க ரூபாய் 67 லட்சம் திட்ட மதிப்பீடு செய்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31 ஆம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.  இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்ணகி கோயிலுக்கு கேரள வனப்பகுதி கொக்கரகண்டம் வழியாக சாலை அமைக்க அன்றைய கேரள முதல்வர் கருணாகரன் உத்தரவிட்டார்.




கேரளாவின் தந்திரம்


அதன்படி தேக்கடி வனப்பகுதி வழியாக 13 கிலோ மீட்டர் சாலை தயாரானது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கேரள அரசு கோவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குள் இருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் இவ்வழியாக செல்ல வேண்டும் என்றும் கோயிலுக்குச் செல்ல மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தமிழக - கேரள மாநில அரசு அதிகாரிகள் கலந்து பேசி கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1985 முதல் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கு வரும் தமிழக பக்தர்கள் இடம் கேரள வனத்துறை மற்றும் காவல்துறையினர் மிகுந்த கெடுபிடியாக மரியாதை குறைவாகவும் நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.




 


தமிழகம் சார்பில் சாலை அமைக்க கோரிக்கை


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இக்கூட்டத்தில் மக்கள் ஒரு வாரம் தங்கி இருந்து கொண்டாடிய சித்திரை முழுநிலவு விழா காலப்போக்கில் கேரள வனத்துறையின் கெடுபிடியால் மூன்று நாள் விழாவாக குறைக்கப்பட்டது. பின்னர் ஒரு நாள் விழாவாக மாறி தற்போது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே என சுமார் 8 மணி நேர விழாவாக குறைக்கப்பட்டுள்ளது. பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு நிரந்தர சாலை அமைக்க வேண்டும் அப்படி நிரந்தர சாலை அமைத்தால் தமிழக எல்லையிலுள்ள தமிழ் கடவுள் கண்ணகியை தமிழர்கள் சென்று வழிபட தடை ஏதும் இருக்காது. தமிழக பக்தர்கள் நீண்டகால கனவான பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள வழி சாலையை அமைத்தால் தான் கண்ணகி கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறும் தமிழ்மொழி பிறர் நலன் என்று தமிழுக்காக முன்னிறுத்தி செயல்படும் தற்போதைய திமுக அரசு தனது ஆட்சி காலத்தில் பளியன்குடி சாலையை அமைக்க வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்