மதுரையைச் சேர்ந்த மாணவர் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்த மனு.

Continues below advertisement

அதில், "நான் மதுரையில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரி B.Com.,(CA) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். மேலும் எனது குடும்பத்தில் நானே முதல் பட்டதாரி. இந்நிலையில் கடந்த மே 2/2022 அன்று எனது கல்லூரி முதல்வர் என் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 447, 294(b), 323 மற்றும் 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் கல்லூரியில் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து 25.06.2022 அன்று நடைபெற்ற 4வது செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை ஏற்கனவே விசாரித்து இந்த நீதிமன்றம் கல்லூரி முதல்வரிடம் எனது கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.

Continues below advertisement

இந்த உத்தரவின் அடிப்படையில் எனது கல்லூரி முதல்வரிடம் எதிர்வரும் காலங்களில் நான் தவறு ஏதும் செய்ய மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு தேர்வு எழுதினேன்.

இந்நிலையில் மீண்டும்  கடந்த 11.08.2022 அன்று எனது கல்லூரி முதல்வர் மூலமாக எனது தந்தைக்கு என் மீதான கிரிமினல் வழக்கு முடிவடையும் வரை நான் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என தகவல் அனுப்பப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நான் எதிர்வரும் காலங்களில் எந்த தவறும் செய்ய மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் கல்லூரிக்குள் அனுமதிக்காதது சட்டத்திற்கு புறம்பானது எனவே என்னை படிப்பதற்கு கல்லூரிக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கல்லூரி தரப்பில், கல்லூரிக்கு அவ பெயர் ஏற்படுத்திய மாணவர் மீதான குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளதால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி, B.Com.,(CA) பட்டப்படிப்பை இரண்டாண்டுகள் முடித்து, குடும்பத்தில் முதல் பட்டதாரியான மனுதாரரின் நலனைக் கருத்தில் கொண்டு,  கல்லூரி முதல்வர் மாணவருக்கு எதிராக அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதி மாணவர் தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்


கட்டிட அனுமதியை இஸ்லாமியர்களின் தொழுகை பள்ளிவாசல் கட்டப்படுவதாக கூறி,  ரத்து செய்து ஊராட்சி மன்ற தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் அரியக்குடியைச் சேர்ந்த கனி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தில்  தனியார் அறக்கட்டளையின் சார்பாக அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தில் இஸ்லாமிய மாணவர்கள் அரபி கற்றுக் கொள்வதற்காக அரபிக் பயிற்சி பள்ளி தொடங்கப்பட உள்ளது. ஆனால் அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா  கடந்த வாரம் இந்த கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட கட்டிட வரைபட அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்ட விரோதமானது. இதுகுறித்து கேட்டபோது இந்த இடத்தில்  இஸ்லாமியர்கள் தொழுகை பள்ளிவாசல் நடத்தப்பட்ட உள்ளதாகவும், அதற்கு முறையான அனுமதி பெற்று வருமாறு கூறி கட்டிட வரைபட அனுமதி ரத்து செய்ததாக தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் சட்டவிரோதம் எனவே ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவை ரத்து செய்து அரபி பள்ளி பயிற்சி நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முகமது சபீக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "வரைபட அனுமதி பெற்ற கட்டிடத்தில் அரபிக் பயிற்சி பள்ளி மட்டுமே நடத்தப்பட உள்ளது. அங்கு இஸ்லாமியர்களின் தொழுகை பள்ளி நடத்தப்பட மாட்டாது" என உத்தரவாதம் அளித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி ஊராட்சி மன்ற தலைவரால் வரைபட அனுமதி ரத்து செய்த பட்ட உத்தரவை ரத்து செய்து அரபி பள்ளி பயிற்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.