உசிலம்பட்டி அருகே மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்த மகனை தாய் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

போதைப் பொருள் காரணமாக குற்றங்கள்


மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் காரணமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.


இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்த மகனை தாய் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மது போதையில் தகராறு:




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் சிவசாமி, இவருக்கு விவாகரத்து ஆகி தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையாகி தினசரி மது போதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை சேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் தனது தாயுடன் தொடர்ந்து மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.


அடித்துக் கொன்ற தாய்:




இன்று வழக்கம் போல மது போதையில் வீட்டிற்கு வந்த சிவசாமி, தாயுடன் வழக்கம் போல தகராறில் ஈடுபட்டதுடன் தாயை தாக்க முற்பட்டு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த தாய் பாண்டியம்மாள், மகன் சிவசாமியை கட்டை மற்றும் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து சிவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தாய் பாண்டியம்மாளை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.