மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளிடம் கூறியதாவது,” ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி புத்தகத்தை பொதுமக்களுக்கு இன்று விநியோகம் செய்தோம். அம்பேத்கர், பெரியார் தொடங்கி திராவிட கழகத்தினரும் மனுஸ்மிருதி புத்தகத்தை கொளுத்தியுள்ளார்கள். இன்றைக்கு நம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும், முரண்பாடுகளுக்கும், சாதிய பாகுபாடுகளுக்கும், பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்துகள் இந்த மனுஸ்மிருதி தான்.
மனுஸ்மிருதி தனது அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் மக்கள் இயக்கம் போல் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பிற இயக்கங்களைப் போல சராசரியாக மக்கள் இயக்கம் கிடையாது. ஒரு கலாச்சார இயக்கமாகவும் அது இல்லை. ஆர்.எஸ்.எஸ் அடிப்படையில் மதவாத அரசியலை, வெறுப்பு அரசியலை, வர்ண பாகுபாடு அரசியலை கொண்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஒரு முறைக்கு இருமுறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். இந்திய மண்ணில் முஸ்லிம் வெறுப்பையும், கிறிஸ்துவ வெறுப்பையும் விதைக்கும் ஒரு இயக்கம். இந்துக்களை மேல் சாதி, கீழ் சாதி என பிளவுபடுத்தி அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்கம். சமூக ஒற்றுமைக்கு எதிரான இயக்கம். இதனால்தான் இந்த இயக்கம் தமிழ்நாட்டில் வேறு ஊன்றுவது மிகவும் ஆபத்தானது என விசிக உட்பட அனைத்து கட்சிகளும் எச்சரிக்கிறோம் என்றார்.
ஆர்.எஸ்.எஸ் இன் ஒரு பிரிவுதான் பாரதிய ஜனதா கட்சி என்றாலும், பாரதிய ஜனதா கட்சி ஒரு அரசியல் இயக்கியமாக இருக்கிறது. பிஜேபி அரசியல் இயக்கம் என்பதனால் அது பேரணி நடத்துவதில் எந்தவித தயக்கமும் எங்களுக்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவில் பிஜேபி இருக்கும் பொழுது பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ?.
பா.ஜ.க., 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால் விடுதலை சிறுத்தை கட்சி மட்டுமின்றி எந்த ஒரு கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து இருக்காது. தற்போது உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஆர்.எஸ்.எஸ் திணறுகிறது. மாவட்ட வாரியாக ஆர்.எஸ்.எஸ் இன் மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் கேட்டதற்கு பதில் அளிக்க முடியாமல் பின் வாங்கிக் கொண்டது. இந்துக்களின் நலனுக்காக தான் புரட்சியே மேற்கொள்கிறோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்