குடும்பத்துடன் பாடுபட்டு கடும் உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பனை வெல்லம் எனப்படும்  கருப்பட்டிக்கு அரசே ஆதார விலையை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என, கடந்த பல ஆண்டுகளாக பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பனைவெல்லத்தை பனை வாரியம் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்து நியாயவிலைக் கடைகள் மூலமாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் வேளாண்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதேநேரம் பனை வெல்லத்திற்கு அரசே விலை நிர்ணயம் செய்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற பல நாள் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்காதது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக வருத்தம்  தெரிவிக்கின்றனர் பனைத் தொழிலாளர்கள்.


    


             'கற்பக விருட்சம்'


பனைமரம் நமது மாநில மரம். பதநீரை காய்ச்சி இனிப்பான தின்பண்டம் தயாரிக்கும் குறிப்பு பழைய கால கல்வெட்டில் கூட இருக்கிறது. பனைமரம் தனது ஒவ்வொரு உடல் பாகத்தையும் மனிதகுலத்துக்கு வழங்கும் ஒரு 'கற்பக விருட்சம்' பனை ஓலைகள், தோரணம் கட்ட, பெட்டி உள்ளிட்ட பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. பாய் தயார் செய்யலாம். பச்சை மட்டை வேலி அமைக்க பயன்படுத்தப்படுகிறது. நாரெடுத்து பிரஷ் செய்ய பயன்படுத்தப்படுகிறது அதன் மட்டை. பனங்காய் உண்பதற்கு இனிய பழம் தருகிறது. கீழே போடும் பனங்கொட்டை, கிழங்காக மாறி உணவுப் பொருளாக பயன்படுகிறது. பனை மரத்தின் பாளை, பதநீர் பெறுவதற்கு பயன்படுகிறது. நடு மரம் வீட்டில், உத்திரம் அமைப்பதற்கு பயன்படுகிறது. கற்பக விருட்சம் எனப்படும் இந்த பனை மரத்தில் கிடைக்கும் பதநீரை பயன்படுத்தி பனைமர தொழிலாளர்கள் கடின உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பனைவெல்லந்தான் நமக்கு கருப்பட்டியாக கிடைக்கிறது.


 


'விவசாயத்திற்கு நிகரான பனைத்தொழில்'


தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம்  மாவட்டத்தில் கடந்த காலங்களில்  கிட்டத்தட்ட ஒரு கோடி பனை மரங்கள் இருந்த நிலையில், தற்போது 50 லட்சம்  பனை மரங்கள்தான்  உள்ளன. இந்த மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனைத் தொழிலும்   இருந்து வருகிறது. இதனால், இந்த மாவட்டத்தில் இத் தொழிலை நம்பி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பனைத் தொழிலாளர்களும்  இருக்கின்றனர். மாவட்டத்தில் கீழக்கரை, திருப்புல்லாணி, ஏர்வாடி, அடஞ்சேரி, காவாகுளம், கடுகு சந்தை சத்திரம், சாயல்குடி, நரிப்பையூர், உறைக்கிணறு மற்றும் கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான பனைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் காலை நான்கு  மணி முதல் மாலை ஏழு மணி வரை தன் குடும்பத்தினருடன் சிறு குழந்தைகள் வரை  கடினமாக உழைத்து பனைவெல்லத்தை உற்பத்தி செய்கின்றனர். அதிகாலை முதல்,  பனைமரத்தில்  ஏறி அதைச்சீவி அதிலிருந்து கிடைக்கும் பதநீரை இறக்கி, பக்குவம் தவறாமல்   காய்ச்சி அச்சுகளில் வார்த்து பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டியை உற்பத்தி செய்கின்றனர்.  ஆனால் அதை மிகவும் எளிதான முறையில் குறைந்த விலைக்கு அவர்களிடமிருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.  இதனால் அவர்களின் உழைப்பிற்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் மிகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.  


  'பட்ஜட்டில் இடம்பெறவில்லை'


இந்த நிலையில்,  மதிப்புக் கூட்டுப் பொருட்களான பனை வெல்லத்தை, பனை வாரியம், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்து, நியாயவிலைக் கடைகள் மூலமாக வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளின் காவலன் எனும் பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பனை செய்யவும், செங்கல் சூளைக்கு பயன்படுத்தும் செயல்களையும் தடுக்க, இந்த அரசு உத்தரவு பிறப்பிக்கும். தவிர்க்க முடியாத காரணங்களால், பனை மரங்களை வெட்ட தேவை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் மூன்று கோடி ரூபாய் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்,எனவே, பனைமரங்களை போற்றி பாதுகாக்கும் பணியை அரசு கவனமாக மேற்கொள்ளும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான பனை வெல்லம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்படும். பனை கருப்புக் கட்டி தயாரிக்க நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும் என,வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது சட்டமன்றத்தில் பேசினார்.


'இனிக்கும் கருப்பட்டிக்கு கசக்கும் விலை'


ஆனால், தற்போது ஒரு கிலோ கருப்பட்டியை 200   ரூபாய்க்கு தொழிலாளர்களிடமிருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் இருமடங்கு லாபமாக மொத்த விலையாக கிலோ 350 முதல் 400  வரை சில்லறை விலையாகவும்,  கிலோ 300   வரை மொத்த விலையாகவும் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர்.ஆனால் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. 'சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக ஒரு இனிப்பான பொருளை உண்ண முடியுமென்றால், அது நாங்கள் தயாரிக்கும்  கருப்பட்டி தான்' 'ஆனால் எங்களுக்கோ அதன் விலை கசக்கிறது' ஏப்ரல் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரை 6 மாசம்தான் பனை சீசன் காலம்.  எனவே ஆறு மாதம் மட்டுமே நடக்கும் இந்த தொழிலை  நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்.ஆகவே, தமிழ்நாடு அரசு பனங்கருப்பட்டிக்கு நிரந்தர ஆதார விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்னும் எங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இப்பகுதி பனை தொழிலாளர்கள்  தமிழ்நாடு  அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.