தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கொடைக்கானல் பகுதியில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவிக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருவதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுருளி அருவியில் குளிக்க பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சுருளி அருவியில் விரைவில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க உள்ளோம். அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் இது நடக்கும்” என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X