மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 137 அடியை எட்டியுள்ளது. இதனால் முல்லை பெரியாறு ஆற்று கரையோர பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியாகவும் , அணையின் நீர் இருப்பு 6,521 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 3,244 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேற்றம் என்பது 2,200 கன அடியாகவும் உள்ளது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 11.10 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மில்லி மீட்டர் மழையும் பெய்ததால் அணைக்கு நீர் வரத்து தற்போது 137.60 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 137 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணி துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர். அணையில் 142 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்ட விவசாயிகளிடம் பல நாட்களாக உள்ள நிலையில், இது குறித்து 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறியதாவது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வைகை அணையிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாய சங்கத்தினர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மூன்று முறை 142 அடி வரை தண்ணீரை தேக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அணையில் நீரை அதிகமாக தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பருவ மழை அதிகம் இருப்பதால் இந்த சூழலுக்கு ஏற்ப அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்