தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.
ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு கடந்த 10ம் தேதி நண்பகல் 12.10மணிக்கு தொடங்கி இன்று மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்று நிறைவுபெற்றது.
இந்த ஆன்லைன் முன்பதிவில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.
டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்