திருச்சியை சேர்ந்த அருட்சகோதரி ரோசரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடைமனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில்," தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டி கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டு இன்றுவரை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாணவிக்கு எதிர்பாராதவிதமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவருக்கு அன்று முதல் உதவி சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் அவருடைய வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் 16ஆம் தேதி மாலை காவல் துறையினரின் மூலமாக மாணவி விஷம் அருந்திய தகவல் கிடைத்தது. 19ஆம் தேதி மாணவி இறந்துவிட்டார். இந்த வழக்கில் சகோதரி சகாயமேரி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். வழக்கில் விடுதியில் மாணவியை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறச்சொன்னதாகவும் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற எந்தவிதமான மதமாற்றமும் நடைபெறுவதில்லை. எந்த மாணவரும் அதுபோன்று நடத்தப்படுவதும் இல்லை. இந்த வழக்கில் ரகசிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். ஆகவே, இந்த வழக்கில் எங்களையும் இடையீட்டு மனுதாரராக இணைத்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். நாளை மாலை 4 மணிக்கு தஞ்சை மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், இடையீட்டு மனுவும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.