தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க கோரி 2 வழக்குகளில், மது விற்பனை குறித்து தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தக்கல் செய்த மனு.

 

அதில், "தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில், தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.அதற்கு நீதிபதிகள், விற்பனையில் தமிழகமே பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது. அரசுத்தரப்பில், மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

அதற்கு நீதிபதிகள், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

 

அரசுத்தரப்பில், கொரோனா கால கட்டத்திலேயே மற்ற மாநிலங்களிலிருந்து மது வாங்கி வந்ததாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுப்பிரியர்கள் மாற்றுவழியையே யோசிக்கின்றனர். 21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், மாணவர்களுக்கு மது விற்பனை 100% செய்யப்படுவதில்லையா? என கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு அரசுத் தரப்பில், அரசு இந்த விசயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

 

அதையடுத்து நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.