தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் செய்துவரும் வழக்கப் பணிகளையும், செய்யவேண்டிய பணிகள் குறித்தும் துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு பணிகளை தொடங்கினார்கள். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. 




அதன் பின் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும், அணைகள் பாதுகாப்பு அதிகாரியுமான ராகேஷ் கஷ்யாப் உள்ளார். இந்தகுழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார்.




தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் கிரண் ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். இக்குழுவினர் கடந்த ஜூலை மாதம் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அணையில் செய்துவரும் வழக்க பணிகளையும், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இந்த துணை கண்காணிப்பு குழுவினர்  இன்று அணையின் நீர் மட்டம் 120.55 கன அடியாகவும் அணைக்கு நீர் வரத்து 518.20 கன அடியாகவும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 976.53 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 2736.90 மில்லியன் கன அடியாகவும் உள்ள நிலையில் ஆய்வு செய்தனர்.




இந்த ஆய்வில் ஷட்டர் பகுதி,கேலரி, மெயின் அணை, அணையில் நீர்க்கசிவு, நீர் வெளியேற்றம், பேபி அணை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணியின்போது வழக்கமாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் படகுத்துறை மூலமாக முல்லை பெரியாறு அணை பகுதிக்கு செல்வது வழக்கம் , ஆனால் இன்று தமிழக பொதுப்பணித்துறையினர் ஆய்வுக்கு செல்லவில்லை.


முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி தருவதற்கு மறுப்பதாக கூறி இன்று துணை கண்காணிப்பு குழுவினரின்  ஆய்வுக்கு சென்ற தமிழக பொதுப்பணித்துறைஅதிகாரிகள் ஆய்வை புறக்கணித்து அணையை விட்டு வெளியேறி வெளிநடப்பு செய்துள்ளனர். 




தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்த சம்பவத்தை வரவேற்கும் விதமாக இனிப்புகளை வழங்கி  விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் நீர்வள ஆணைய ஆய்வு குழுவினர் முல்லைப் பெரியார் அணைக்கு வரவே கூடாது என மனு அளித்தனர். இன்று தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை மத்திய நீர்வள ஆணையத்தின் துணை குழுவினர் ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றனர்.


இந்த ஆய்வின்போது தமிழக பொதுப்பணித்துறை சார்பாக அணையில் பராமரிப்பு பணி செய்ய தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்கு மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கேரள வனத்துறை முட்டுக்கட்டை செய்வதாக கூறி அனுமதி வழங்காததால் இன்று நடைபெறவிருந்த ஆய்வினை புறக்கணித்துவிட்டு  தமிழக பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி தமிழக வந்தனர்.




அவர்களை லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் வரவேற்று மத்திய குழுவை எதிர்த்து ஆய்வை புறக்கணித்த தமிழக அதிகாரிகாளின் செயலை பாராட்டி அதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் சார்பாக தமிழக பிரதிநிதியான பொறியாளர் குமாருக்கு இனிப்பு வழங்கி மற்றும் காவல் துறையினர், விவசாயிகளுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மீறி மத்திய நீர்வள ஆணையம் முல்லைப் பெரியாறு அணையை 12 மாதம் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்ததை கண்டித்தும் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஒரு ஆய்வு செய்வதற்கும் எந்த ஒரு குழுவும் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொறியாளர்  குமாரிடம் சங்கத்தின் சார்பாக மனு அளித்தனர்.