தமிழகத்தில்  மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க  கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனு. அதில், "தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி, அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடங்கள் அதிகமாக உள்ளது.


இந்நிலையில் சமீபகாலமாக பல பள்ளிகூடங்களின் மேற்கூறை மற்றும் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.


ஆனால், உயிரிழப்புகள் இல்லை குறிப்பாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் மேற்கூரை
இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.


எனவே, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட  கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தமிழகத்தில் 5583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.


2021-2022 ஆண்டும் தமிழகத்தில் 2553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது. ரூ.3745.28 கோடி நபார்டு கடன் திட்டத்தின் மூலம் 6941 பள்ளிகளுக்கு 40043 வகுப்பறைகள், 3146 அறிவியல் ஆய்வகங்கள், 10470 கழிப்பறைகள், 5421 குடிநீர் வசதிகள், 828387 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.106.78/- கோடி செலவில் 2695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.




மற்றொரு வழக்கு


குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால், கடுமையாக தண்டிக்கப்படுவர்- மதுரைக்கிளை


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த திசைவீரபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடலாடி தாலுகா, மங்களம் கிராம மலட்டாற்று பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக மலட்டாறே திகழும் நிலையில், அளவுக்கு அதிகமாக இங்கு மணல் எடுக்கப்படுகிறது. 


இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதோடு, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. கனிம வள விதிகளின் படி குவாரியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். ஆனால், இந்த குவாரியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. 15 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இது சட்ட விரோதமானது.  ஆகவே, கடலாடி தாலுகா, மங்கலம் கிராமம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்." எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, "குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால், கடுமையாக தண்டிக்கப்படுவர். அரசு தரப்பு வழக்கறிஞர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவது எவ்வளவு முக்கியமோ? அதேபோல அவற்றில் தவறுகள் நிகழும் போது, அரசின் நோக்கம் பாதிக்கப்படாதவாறு காப்பதும் அவசியம் எனக் குறிப்பிட்டு, அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு வைத்தனர்.