கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் புதிய வரலாறு படைத்துள்ளார் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு 






சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவர்களாக அரசு அறிவித்தது. மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம் தேதி ஆன இன்று,  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கி அட்டைகளை வழங்கினார்.




அப்போது அவர் பேசுகையில்..,” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”எல்லோர்க்கும் எல்லாம்” என்ற சமூகநீதி கொள்கையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை மெருகேற்றி வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் ”நான் முதல்வன் திட்டம்”, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் பசியாற்றிடும் ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” போன்ற திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிந்தனையில் உதித்த மகத்தான திட்டங்கள். எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடும் நோக்கில் இதுபோன்ற இன்னும் ஏராளமான திட்டங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 




அந்த வரிசையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 உரிமைத்தொகை வழங்கும் ”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.  இத்திட்டம் தலைமுறை தலைமுறைக்குப் பயனளிக்கப் போகிற மகத்தான திட்டமாகும். இத்திட்டம் எண்ணமாக உதித்து, திட்டத்திற்கு பெயரிட்டு, மிகச்சிறப்பாக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது வரை முழு பெருமையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே  சேரும். இத்தகைய மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ள  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இத்தருணத்தில் வணங்குகிறேன். இந்த திட்டம் நிறைவேற்றியதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய வரலாறு படைத்து விட்டார்" என மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை; முதல்வரின் படத்தினை கோலமாக வரைந்து பொதுமக்களுடன் கும்மி பாட்டுபாடி நடனமாடிய எம்எல்ஏ