தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
மேலும் இந்த சுருளி அருவி உள்ளது. ‘குட்டி குற்றாலம்’ என்று அழைக்கப்படும் இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சுருளி அருவியில் குளிக்க தடை நீடித்து வந்தது. கொரோனா பரவல் குறைந்த காலங்களில் அருவியை பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை சுருளி அருவி திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு படையெடுத்தனர். அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றவாறு குளித்தனர். அருவியில் குளிக்க நபர் ஒன்றுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று மாலையில் வனத்துறையினர் சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில், சுருளி அருவியை பார்க்க அனுமதி என்றும், குளிக்க அனுமதி கிடையாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, அருவிக்கு குளிக்க வந்தவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் அருவியை பார்க்க மட்டும் தான் அனுமதி என்று கூறி சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேநேரத்தில் காலையில் குளிக்க அனுமதி, மாலையில் ரத்து என்ற அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்