தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் தமிழக கேரள எல்லையான கம்பம் , கூடலூர் , உத்தமபாளையம், உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு நின்றன. மதியம் 1.30 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.




ஒரு சில இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மேலும் இடை விடாமல் பெய்த மழையால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குறிப்பாக  ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த சில தினங்களாக சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாத நிலையே இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவி வெறும் பாறைகளாக காட்சியளித்தது.




இந்த நிலையில் ஹைவேவிஸ் மற்றும் சுருளி மலைப்பகுதியில் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல் அருவி பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தது. இதனால் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். இதற்கிடையே காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.  இந்நிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டித்தீர்த்தது.


இதனால் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைக்கண்டதும் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் சுருளி அருவி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.




அதேபோல பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை கும்பக்கரை அருவியில் 4 தினங்களுக்கு முன்பு  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பகுதிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இந்நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகள்  குளிக்க விதிக்கப்பட்ட தடை 5,வது நாளாக தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண