மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. பிற பகுதிகளில் கோடை வெயில்  இருந்து வரும்  நிலையில் கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். இதற்கிடையே பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் வாரவிடுமுறை ழிலாளர் தின விடுமுறை ஆகியவற்றின் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம்  அதிகரித்திருக்கிறது. அதிகாலை 3 மணி முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.



நேற்று காலை 10 மணி அளவில் ஒரே நேரத்தில் கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள் என ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நேற்று பெருமாள்மலை முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுமட்டுமின்றி நகரில் நடைபெற்ற வாரச்சந்தை காரணமாக வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டதால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.




மாலை வரை இதே நிலை நீடித்தது. மாட்டு வண்டிகள் போன்று வாகனங்கள் மெதுவாகவே சென்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், தன்னார்வலர்கள் இணைந்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். அதன்பிறகு வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்றன. கொடைக்கானலில் கொரோனா காலத்திற்கு பிறகு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டது.  இதனால் கொடைக்கானல் நகரமே சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தங்கும் விடுதிகள், தனியார் வீடுகள் என அனைத்தும் நிரம்பின. இதனால் அறைகள் கிடைக்காத சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதற்கிடையே கோக்கர்ஸ்வாக், பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், குணாகுகை, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மதிகெட்டான்சோலை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.




மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் கோடை விழாவை நடப்பட்ட மலர் செடிகளில் பல்வேறு வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர். இதுதவிர புகழ்பெற்ற நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி மேற்கொண்டும் உற்சாகம் அடைந்தனர். கொடைக்கானலில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மேலும் மேகங்கள் தரையிறங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண