தமிழக- கேரள எல்லை மாவட்டமான தேனியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து பழனிசெட்டிபட்டி வரையில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு போகமாக வருடந்தோறும்  நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.



இந்த சூழலில் கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை மாற்றம் காலநிலை மாற்றத்தால் இரண்டு போகம் நெல் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் கடந்த ஜூன் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல் விவசாயத்திற்கான முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடவு செய்யப்பட்ட நெற்கதிர்கள் வளர்ந்த நிலையில் முதற்கட்டமாக கூடலூர், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கம்பம், சாமாண்டிபுரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல் போக சாகுபடி நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த அறுவடை பணியானது முடியும் போது முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் நீர் வரத்தின் அளவைப்பொறுத்தே இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர் . கடந்த இரண்டு வருடங்களாகவே தென் மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் காலதாமதமாக பெய்ததால் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதே போலதான் இந்த வருட நெல் சாகுபடியில் இரண்டாம் போகத்திற்கான சிக்கலும் எழுந்துள்ளது.




முல்லை பெரியாறு அணையில் வழக்கமாக இருக்க வேண்டியர் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பின் அளவு சென்ற வருடமும், இந்த வருடமும் குறைந்துள்ளதால் தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் நெல் விவசாயத்திற்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த வருடம் தென் மேற்கு பருவ மழை குறைவால் இரண்டாம் போகத்திற்கு பயன்படும் வகையில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையை விவசாயிகள் எதிர்பார்க்கும் சூழ் நிலை உருவாகியுள்ளது. முல்லை பெரியாறு அணையில் இன்று நீர்மட்டம்  - 128.10 (142 அடி),  நீர் வரத்து – 1310 கனஅடி,  நீர் திறப்பு – 1300  கனஅடியாக உள்ளது.


 


தேனி மாவட்டத்தின் மற்ற அணைகளின் நிலவரங்கள் பின்வருமாறு


 


வைகை அணை,


நீர்மட்டம்  - 54.17 (71 அடி),  நீர் இருப்பு –  2586 மில்லியன் கனஅடி,  நீர் வரத்து – 1014 கனஅடி,  நீர் திறப்பு –1219 கனஅடி                                                     


மஞ்சலார் அணை, 


நீர்மட்டம்  - 55.0 (57 அடி), நீர் இருப்பு – 435.32 மி.கனஅடி , நீர் வரத்து – 0 , நீர் திறப்பு – 0 


சோத்துப்பாறை அணை, 


நீர்மட்டம்  - 120.21 (12.28 அடி) , நீர் இருப்பு – 90.56 மி.கனஅடி ,நீர் வரத்து –0 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி


சண்முகா நதி அணை,


நீர்மட்டம்  - 37.80 (52.55 அடி) ,நீர் இருப்பு – 39.19 மி.க.அடி, நீர் வரத்து – 0 கனஅடி , நீர் திறப்பு – 0  கனஅடி


 


தேனி மாவட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும் Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!