கோடை வந்துவிட்டால் போதும் வெப்பம் சார்ந்த நோய்களுக்கும் குறைவிருக்காது. கடும் குளிரைக் கூட ஸ்வெட்டரைப் போட்டு சமாளிக்கும் வயதானோரும், குழந்தைகளும் கோடையில் வெளியேயும் செல்ல முடியாமல், வீட்டினுள்ளேயே முடங்க முடியாமல் தவிக்கும் தவிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.


 





கோடை வெயிலில் நம் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். அதற்காக அதிகமாக மெனிக்கிடத் தேவையில்லை. சில அடிப்படை வாழ்க்கை முறையின் மூலமே கொளுத்தும் கோடையை சமாளிக்கலாம்.



 

இந்நிலையில் வெப்பம் அதிகரிப்பதை தடுக்க மாற்றுத்திறனாளி, சமூக ஆர்வலர் மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் மணிகண்டன் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேற்கொண்டார். பூமி வெப்பம் அதிகரிப்பை தடுக்க மரங்களை அதிகம் நட வேண்டும் என்று பதாகை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் உரையாற்றினார். இது குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்,” சமீப ஆண்டுகளில் மக்கள் தொகையும் நவீன வசதிகளும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து பூமி வெப்பம் அதிகரிக்கிறது.



 

நவீன வசதிகள் மீதான முக்கியத்துவம் மக்களுக்கு சுற்றுச்சூழல் மீதும் இருக்க வேண்டும் என்றும் இயற்கையை பாதுகாப்பது மற்றும் மரங்கள் வளர்ப்பது குறித்து மக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அதிகமாக பேசினால் அவற்றின் மீது அனைவருக்கும் ஆர்வம் ஏற்படுத்த முடியும் என மக்களிடம் தெரிவித்தேன். மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் மரங்கள் வளர்ப்பதால்  ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களை எடுத்துக் கூறினேன்” என்றார். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இவரது கருத்துகளை கேட்டு கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.