இக்கல்வெட்டு சேதுபதி மன்னர்களுடையதாகவோ அல்லது சிவகங்கையை ஆண்ட மன்னர்களை குறித்த பேயராகவோ இருக்கலாம் என கருத முடிகிறது. யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.


 


 

யானைச்சின்னத்துடன் கூடிய சூலக்கல் கண்டுபிடிப்பு.

 

பொன்னாகுளத்தைச்  சேர்ந்த மாதவன், புத்தகக் கடை முருகன் ஆகியோர் கொடுத்த தகவலின் படி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளி ராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா. சரவணன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா‌.காளிராசா தெரிவித்ததாவது. சிவகங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக தொன்மையான எச்சங்களை பாதுகாப்பதும் தொன்மையான எச்சங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்துவதும் மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான பணிகளை தொடர்ச்சியாக சிவகங்கை தொல்நடைக்குழுசெய்து வருகிறது.

 

முத்துப்பட்டி பொன்னாகுளம் புதுக் கண்மாயில் யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சூலக்கல் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் எல்லைகளை குறிப்பதற்காக நடப்படும், சிவன் கோவில் சார்ந்த சொத்தாக இருந்தால் சூலக்கல்லும் பெருமாள் கோயிலுக்கு விடப்பட்ட தேவதானம் இறையிலி போன்றவற்றை குறிப்பதற்காக திருவாழிச்சின்னம் பொறித்த கல்லும் நடப்படுவது வழக்கமாகும்.

 

ஆனால் இங்கு காணப்படுகிற சூலக்கல்லின் கீழே யானை இடம்பெற்றுள்ளது மிகுந்த சிறப்புக் கூறியது.

 

சூலக்கல்லில் பொறிக்கப்பட்ட யானைச் சின்னம்.

 

பொன்னா குளம் புதுக் கண்மாய் உள்பகுதியில் இச்சூலக்கல் காணப்படுகிறது. 2 அடி உயரமும் ஒரு அடி அகலம் உடையதாக  இச்சூலக்கல் காணப்படுகிறது. இதில் திரிசூலத்தின் கீழ்பகுதியில் யானை பொறிக்கப்பட்டுள்ளது. யானைப் படையை உடைய வணிகர்கள். அத்திகோசத்தார் எனப்பட்டனர். பெருவழிகளில் வணிகர்களைப் பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னர்கள் கோயில்களுக்கு கொடையளிக்கும்போது உடன் இருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர்.

 

இவர்களைப் பற்றிய குறிப்பு பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இன்றும் இயங்குகிற மதுரை தொண்டி வணிகப்பெருவழியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் இச்சூலக்கல் நடப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருந்த அத்திகோசத்தார் எனும் யானைப்படையை உடையவர்கள்  தானமாக வழங்கிய நிலத்தில் அவர்களின் யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல்லை நட்டு வைத்திருக்கலாம். இவ்வாறான சிறப்பு பொருந்தியதாக இச்சூலக்கல்லை கருதவும் இடமுண்டு.

 

காளையார் கோவில் வட்டம் சாத்தரசன் கோட்டையை அடுத்துள்ள அதப்படக்கி பாப்பா குடியில் இவ்வாறான யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல் அங்குள்ள மக்களால் சமயனாக வழிபடப்படுகிறது. அச்சூலக்கல் சில ஆண்டுகளுக்கு முன்னாள் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு மற்றும் என்னால் அடையாளப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பொன்னாகுளம் பகுதியில் வெட்டிக்குளம் கண்மாய்ப் பகுதியில் திரிசூலம் பொறித்த மற்றொரு சூலக்கல் ஒன்றும் ஊரை ஒட்டிய பகுதியில் திருவாழிக்கல் ஒன்றும் காணப்படுகிறது. 

 

புதுக்குளம் கண்மாயில் கல்வெட்டு. 

 

புதுக்குளம் கண்மாயில் நான்கு பக்கமும் செதுக்கப்பட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று நடப்பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டு எழுத்துகள் முழுதும் சிதைந்து கற்பொடியாகி கீழே விழுந்துவிட்டன. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சில எழுத்துகள் மட்டுமே தெரிகின்றன. தெரிகிற எழுத்தைக்கொண்டு  ஒரு பகுதியில் நட்சத்திரம் குறிப்பிடப்பட்டதை உணர முடிகிறது.

 

மற்றொரு பகுதியில் விசய என்கிற சொல்லை மட்டும் அடையாளப்படுத்தமுடிகிறது, எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு 17,18 ஆம் நூற்றாண்டாக கருத முடிகிறது. விசய என்கிற சொல்லை கொண்டு இக்கல்வெட்டு சேதுபதி மன்னர்களுடையதாகவோ அல்லது சிவகங்கையை ஆண்ட மன்னர்களை குறித்த பேயராகவோ இருக்கலாம் என கருத முடிகிறது.

 

யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.