சிவகங்கையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் வைகை ஆற்று பாலத்தின் கீழ் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிக்கப்பட்டுள்ள ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் 15.7.2025 அன்று முதல் செப்டம்பர் 2025 வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி, 15.7.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடர்ந்து, பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் பல படங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், ”உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களின் வாயிலாக, நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அந்தந்த துறைகளால் சேவைகள் வழங்கப்படும். அதில், நகர்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் சொத்துவரி, குடிநீர் வசதி உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், காலி நிலவரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் கட்டட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவைகள் நகர்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.
ஆற்றில் கொட்டப்பட்ட மனுக்கள்
மேலும், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு அளித்திட விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளும் இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் வைகை ஆற்று பாலத்தின் கீழ் கொட்டப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி நெல் முடிக்கரை இந்த கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதி கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை திருப்புவனம் வைகை ஆற்று பாலத்திற்கு கீழ் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.