தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த லங்கேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் கருப்பசாமி (52) 2007ஆம் ஆண்டு பெருமாள் என்பவரை கொலை செய்த வழக்கில் 2008 ஆம் ஆண்டு எனது கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு சிவகங்கை திறந்த வெளி சிறைக்கு மாற்றப்பட்டார். எனது கணவர் மீது இந்த கொலை குற்றத்தை தவிர வேறு எந்த வழக்கும் இல்லை. மேலும் சிறையில் இருந்த 15 வருடங்களில் எந்த ஒரு குற்றச் செயலிலும் அவர் ஈடுபட்டது இல்லை. எனது கணவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்காக சிவகங்கை திறந்தவெளி சிறையில் பல்வேறு கடினமான வேலைகள் கொடுத்துள்ளனர். சிறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். மேலும் சிறையில் வேலை பார்த்ததற்கான சரியான கூலியும் வழங்காமல் இருந்துள்ளனர்.


இதனால் பல முறை சிவகங்கை திறந்தவெளி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றக் கோரி மனு செய்துள்ளார். இந்தநிலையில் 2022 மார்ச் 22ஆம் தேதி எனது கணவர் கருப்பசாமி உடல்நலக்குறைவால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை எனது கணவர் இறந்துவிட்டார். சிவகங்கை திறந்தவெளி சிறையின் காவலர்கள் எனது கணவர் விடுப்பு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக மரத்தில் ஏறியதாகவும் அங்கு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கியதாகவும் தெரிவித்தனர். எனது கணவர் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எனது கணவர் இறந்த இடத்தின் வீடியோ காட்சிகள், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ எங்களுக்கு வழங்கவில்லை.


எனவே, எனது கணவர் இறந்த இடத்தின் வீடியோ காட்சிகள், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ எங்களுக்கு வழங்கவும், இழப்பீடு வழங்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, 2 வாரத்திற்குள் பிரேத பரிசோதனை வீடியோ மற்றும் அறிக்கையை மனுதாரருக்கு வழங்கவும்,வழக்கு குறித்து உள்துறை கூடுதல் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜீன் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


 









 

ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற வேண்டுமென வி.புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் கொடுத்த நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் 

 

தூத்துக்குடி மாவட்டம் புதூரைச் சேர்ந்த ராமர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற வேண்டுமென வி.புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்"என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆஜராகி, சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டது. இதில், விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது" என்றார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 







 











நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

 

மதுரை தெற்கு மாரட் வீதியை சேர்ந்தவர் பசீர் முகமது. தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் பணியாற்றினார்.  கடந்த 2018-ம் ஆண்டு இவா் தனது நண்பா்களுடன் குற்றலாத்துக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தாா்.இதற்கிடையே இவருக்கும், அவருடைய நண்பா் சுல்தான் அலாவுதீன் (வயது 30) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சுல்தான், பஷீா் முகமதுவை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பஷீர் அகமது இறந்தார். இந்த கொலை தொடா்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுல்தான் அலாவுதீனை கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், சுல்தான் அலாவுதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார்.