சிவகங்கை, இளையான்குடியில் அரசு இடத்தில் அனுமதி இன்றி  வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சாதி கட்சி கொடிகள், பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்ற அகற்று கோரிய வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதில் மனு தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியை சேர்ந்த ரத்தினகுமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு. அதில், "சிவகங்கை இளையான்குடி பகுதியில் இளையான்குடி, சாலைக்கிராமம் காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையங்களில் அடிக்கடி சாதி மற்றும் சமுதாய ரீதியிலான வகையில் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகின்றது . 

 

நெஞ்சாலைத்துறை பகுதியில் வருவாய்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும அரசு புறம்போக்கு இடங்களில் அரசு அனுமதி ஏதும் பெறாமல் சாதி மற்றும் சமுதாயம் சார்ந்த கொடிக்கம்பங்கள், உருவம் பொறித்த கல்வெட்டு சுவர்கள், போஸ்டர், இரும்பிலான  பதாகைகள் ஆகியவை அரசு புறம்போக்கு இடங்களில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறையின் எந்த அனுமதியும் பெறாமல் அரசு நிலத்தில் வைத்து உள்ளனர்.

 

இதனால், அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு காவல்துறையின் மூலமாக வழக்கு பதிவு செய்யப்படுகின்றது. மேலும் அடிக்கடி சாலை விபத்தும் ஏற்படுகின்றது. அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. எனவே, சிவகங்கை இளையான்குடியில் அரசு புறம்போக்கு இடங்களில் அரசு அனுமதி பெறாமல் சாதி மற்றும் சமுதாயம் சார்ந்த கொடிக்கம்பங்கள், சாதி, சமுதாயம் சார்ந்த உருவம் பொறித்த கல்வெட்டுகள், போஸ்டர், இரும்பு பதாகைகளையும் அகற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார்,  விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அரசு தரப்பில், சிவகங்கை, இளையான்குடி பகுதியில் மட்டும் பேனர்,  கொடிகம்பங்கள்  உள்ளதாக கூறி விட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும்  உள்ளதாக பொதுவாக மனுவில்  கூறி உள்ளார். 

 

அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

 

இதனையடுத்து நீதிபதிகள், சிவகங்கை, இளையான்குடி பகுதியிலுள்ள அரசு இடத்தில அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சாதி கட்சி கொடிகள், பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்ற அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

 



மற்றொரு வழக்கு

















 

 

மதுரை சோழவந்தான் அருகே வைகை ஆற்றை மாசடைய செய்யும் வகையில் கட்டப்பட்டு வரும் கழிப்பிறையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கு குறித்து சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த தனசேகரன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "சோழவந்தான் வைகை ஆற்றுப் பகுதியில் நாராயணப் பெருமாள் கோயில், சனீஸ்வரர் கோயில், வட்டப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாள் நடக்கும் அப்போது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். சோழவந்தானைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 

 

தற்போது, இங்கு மேலும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக அமையும். ஏற்கனவே இருக்கும் கழிப்பறைகள் முறையாக பராமரிப்பதில்லை. மேலும் வைகை ஆறு மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

எனவே, வைகை ஆற்றங்கரையோரம் வட்டப்பிள்ளையார் மற்றும் சனீஸ்வரன் கோயில் அருகே கழிப்பறை கட்டத் தடை விதிக்க வேண்டும். மாற்றிடத்தில் கழிப்பறை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அரசு தரப்பில், மனுதாரர் குறிப்பிடும் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக கண்டறியப்பட்டதால், கழிப்பறை அமைக்கப்படுகிறது. கழிப்பறை கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. வேண்டுமென்றே புகார் கூறப்படுகிறது என்றார்.

 

இதையடுத்து நீதிபதிகள், கழிப்பறைக்கு சாக்கடை வசதி உள்ளதா? கழிப்பறை அமைப்பதால் வைகை ஆற்றுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.