காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் எலும்பாலான பழங்காலக் கருவி ,பானையோட்டுக் குறியீடு,சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிப்பு.


சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா,செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் காளையார் கோவில் பாண்டியன் கோட்டைப் பகுதியில் மேற்கொண்ட  மேற்பரப்பு கள ஆய்வில் எலும்பாலான பழங்காலக் கருவி, பானையோட்டுக் குறியீடு,சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இது குறித்து கா.காளிராசா தெரிவித்ததாவது.


காளையார் கோவிலில் சங்க காலத்தோடு தொடர்புடைய பாண்டியன் கோட்டை பழமையான தொல்லியல் மேடாக அமைந்துள்ளது. இங்கு சிவகங்கை தொல்நடைக் குழுவினர் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்ச்சியாக பழங்காலப் பொருட்கள் கிடைத்து வருகின்றன‌‌.




வட்ட வடிவிலான கோட்டை.


பழங்கால கோட்டை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 33 ஏக்கர் பரப்பளவில் நடுப்பகுதியில் நீராவி குளத்துடன் புறநானூற்றிலே சொல்லப்படுகிற 21 ஆவது பாடலின் படி 'குண்டுகண் அகழி' ஆழமான அகலமான அகழியை உடையதாக  இக்கோட்டை அமைத்திருந்ததை எச்சங்களின் வழி அறிய முடிகிறது. கோட்டையின் இலக்கணங்களோடு கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவிலும் தெற்குப் பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. இவை கோட்டை காவல் தெய்வங்களாக வணங்கப்பட்டுவருகின்றன.




தொடர்ந்து கிடைக்கும் தொல் எச்சங்கள்.


மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக தொன்மையான எச்சங்கள் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன‌. இதில் வட்டச் சில்லுகள், பானை ஓட்டு எச்சங்கள், பானை ஓட்டுக் கீறல்கள், குறியீடுகள், சங்ககால செங்கல்கற்கள், எடைக்கல் போன்றவைகள் கிடைத்துள்ளன.


தமிழி எழுத்து.


தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது,அதில் பழங்கால சங்க காலப் புலவர் மோசுகீரனார் போன்று மோசிதபன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது.




எலும்பு முனைக்கருவி.


தற்போது  வட்டச் சில்லுகள், பானை ஒட்டுக் குறியீடுகள், எலும்பாலான முனையை உடைய கருவி, பழங்கால கூரை ஓட்டு எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் எலும்பாலான முனையை உடைய கருவி அரிதானதாகும். எலும்பை தேர்வு செய்து அதன் முனையை கூர்மையாக்கி அம்பு போன்ற பயன்பாட்டிற்காகவோ அல்லது நெசவு செய்யும்  கருவியாகவோ இக்கருவியை பயன்படுத்தி இருக்கலாம். இவ்வாறான பொருள் கீழடி போன்ற அகழாய்வு இடங்களில் கிடைத்திருக்கின்றன. இவை மனிதனின் வாழ்விடப் பகுதி என்பதை உறுதிப்படுத்துவதாகக் கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்கு முன் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் காளையார் கோவில் எனப்படும் கானப் பேரேயிலின் பழங்கால ஈமக்காட்டு கல்வட்ட எச்சங்கள்  அடையாளப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




சிவகங்கை தொல்நடைக் குழு மேற்கொண்ட முயற்சியின் படி இவ்விடம் தொல்லியல் துறையால் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் முறையான தொல்லியல் துறை அகழாய்வு செய்யும் போது பழமையான சங்க கால கோட்டை அமைப்பு மனித வாழ்வியல் பகுதி வெளிப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று தெரிவித்தார்.