நாட்டாகுடியில் தனியார் உணவு டெலிவரி சேவையின் மூலம் தினமும் ஒருவேளை உணவு வழங்கி வருகிறார். இந்த மனிதநேய செயல் மூலம், முதியவர்கள் பசியாற்றி நன்றியை தெரிவித்துள்ளனர்.

 
நாட்டாகுடி கிராமம்  
 
சிவகங்கை மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இலந்தங்குடி, நாட்டாகுடி, பி.வேலாங்குளம், மாத்தூர், புதுக்குடியிருப்பு மற்றும் மீனாட்சிபுரம் என 6 உட்கடை கிராமங்கள் உள்ளன. இதில், நாட்டாகுடி கிராமத்தில் மொத்தம் 56 வீடுகள் உள்ளன. அதில், சுமார் 24 வீடுகளில் மக்கள் குடியிருந்து வந்தனர். இக்கிராமமானது, மொத்தம் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இக்கிராமத்தின் மக்கள் தொகையில் ஆண்கள் 58 நபர்களும் மற்றும் பெண்கள் 52 நபர்களும் என மொத்தம் 110 பொதுமக்கள் வசித்தனர். இக்கிராமமானது, படமாத்தூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியாகும். இக்கிராமத்தில், பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்களில் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மேற்கண்ட நபர்கள் யாரும் கிராமத்தில் வசித்து வரவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இக்கிராமத்தில் இல்லை என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மாவட்ட நிர்வாகம் விளக்கம்  
 
இது தொடர்பாக நிர்வாகம் சார்பில் கொடுத்த விளக்கத்தில்...,” தொழில் மற்றும் வேலைகளுக்காக கிராமத்திலிருந்து அருகில் உள்ள நகராட்சி பகுதியான சிவகங்கை நகராட்சி பகுதிக்கு இடம்பெயர்வதற்கென அக்கிராமத்திலிருந்து சென்றுள்ளதாக, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகியவைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, தெரிய வந்துள்ளது. கிராமத்திற்கு கூடுதல் தேவைகள் இருப்பின், அவைகள் அனைத்தும் கோரிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். எனவே, நாட்டாகுடி கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம்" எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
 
நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகள்
 
நாட்டாகுடி கிராமத்தின் நிலைமை பற்றிய செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மின்சாரம், தெருவிளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், CCTV கேமராக்கள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால், கிராமம் மீண்டும் உயிர்பெறுமெனவும், மக்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
 
சமூக ஆர்வலரின் மனிதநேய உதவி
 
தற்போது, கிராமத்தில் மட்டுமே வாழும் இரண்டு முதியவர்களுக்கு, கடந்த ஒரு வாரமாக, சிவகங்கை நகரிலிருந்து ஒரு சமூக ஆர்வலர், தனியார் உணவு டெலிவரி சேவையின் மூலம் தினமும் ஒருவேளை உணவு வழங்கி வருகிறார். இந்த மனிதநேய செயல் மூலம், முதியவர்கள் பசியாற்றி நன்றியை தெரிவித்துள்ளனர்.