திண்டுக்கல்லில் புத்தக திருவிழாவை முன்னிட்டு புகைப்பட போட்டி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என போட்டி ஒருங்கிணைப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக துறை, இலக்கிய களம் இணைந்து நடத்தும் 12வது புத்தக திருவிழா ஆக.28ம் தேதி முதல் செப்.7ம் தேதி வரை அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிய போட்டியாக புகைப்பட போட்டி மாவட்ட அளவில் அனைவரும் கலந்து கொள்ளும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லின் அடையாளங்கள் எனும் தலைப்பின் கீழ் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் இருத்தல் வேண்டும். கேமரா மற்றும் மொபைல் என எதனை கொண்டும் எடுத்த புகைப்படமாக இருக்கலாம். ஆனால் புகைப்படத்தில் வேறு தொழில்நுட்ப திருத்தங்கள் செய்ய கூடாது.

தங்களை பற்றியும், புகைப்படத்தை பற்றியும் சிறு குறிப்போடு மென் நகலை dikbookfair2025@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் புகைப்படத்தை 15 x 12 என்ற அளவில் பிரிண்ட் எடுத்து, திண்டுக்கல் இலக்கிய களம், வெங்கடாசலம் அரங்கம், பிச்சாண்டி பில்டிங்ஸ், தலைமை அஞ்சல் நிலையம் அருகில், திண்டுக்கல் 624 001 என்ற முகவரிக்கு ஆக.22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  இந்த புத்தகத் திருவிழாவில் திண்டுக்கல்லின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத்திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, திண்டுக்கல் பகுதியின் இயற்கை காட்சிகள்  விளையாட்டு போன்ற புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த புகைப்படங்கள் கீழ்க்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

புகைப்படங்கள் திண்டுக்கல்  மாவட்டத்தைச் சார்ந்த படங்களாக மட்டுமே இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5 படங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தனது சொந்த படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும். கிராபிக்ஸ் மற்றும் AI (Artificial Inteligence) உருவாக்கிய படங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் புகைப்படங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த படங்கள் 100 dpi (dots per inch) இல் நீண்ட பக்கத்தில் 3,000 பிக்சல்கள் (pixel) கொண்ட RGB (Red Green Blue) கோப்புகளில் இருக்க வேண்டும்.

அந்த புகைப்படங்களை கருப்பு வெள்ளை புகைப்படங்களாக அனுப்பலாம். ஒவ்வொரு புகைப்படமும் புகைப்படத்திற்கான தலைப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படமும் குறைந்தபட்சம் 5 MB க்கு குறைவாக இருத்தல் வேண்டும். புகைப்பட கண்காட்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் முழுதெளிவுத் திறன்கொண்ட RAW / TIFF படங்களை அச்சிடுவதற்கும் / உண்மை தன்மையினை அறிவதற்கும் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள். அந்த புகைப்படங்களில் பார்டர்கள் / வாட்டர் மார்க்ஸ் அல்லது எந்தவித அடையாளமும் இருத்தல் கூடாது.

விண்ணப்ப பட்டியலில் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சி, சமூக ஊடகங்கள், இணையதளம் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவர பயன்படுத்தப்படும். புகைப்பட கண்காட்சியின் நடுவர்களின் முடிவே இறுதியானது. மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிர்வாகம் எடுக்கும் அனைத்து வகையான முடிவுக்கும் கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள்.