“வேர்களைத் தேடி” என்ற திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைப் புரிந்துள்ள, பல்வேறு நாடுகளைச் சார்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவியர்கள் கானாடுகாத்தான் அரண்மனையின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டின் மரபின் வேர்களை தேடி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி வெளியிட்டுள்ள தகவலில்..,” தமிழ்நாடு முதலமைச்சர், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள், தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாட்டு செய்யப்பட்டும்” என அறிவித்தார்கள். அதனடிப்படையில், இப்பண்பாட்டு பயணம் ”வேர்களைத் தேடி” என்ற பெயரில் முதல் மூன்று கட்ட பயணங்களில் 17 நாடுகளைச் சேர்ந்த 194 அயலகத் தமிழ் இளைஞர்களைகளுக்கு தமிழின் தொன்மை, தமிழர் வாழ்வியல், கலாச்சாரம் குறித்து விளக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
சிறப்பு நடவடிக்கை
அதனைத்தொடர்ந்து, நான்காம் கட்டமாக ஃபிஜி, இந்தோனேசியா, ரீயூனியன், மர்தினிக்கு, மொரிசியஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், குவாதலூப்பு, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, ஜெர்மனி ஆகிய 13 நாடுகளைச் சார்ந்த 100 அயலகத் தமிழர்களுடன் கடந்த 01.08.2025 முதல் 15.08.2025 வரை நடத்திட திட்டமிடப்பட்டு, அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், கலை நயங்கள் ஆகியவைகளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் ஆகியோர் நேரில் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கானாடுகாத்தான் அரண்மனை
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, மேற்கண்ட 13 நாடுகளிலிருந்து வருகை புரிந்துள்ள 100 மாணவர்கள் கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட அரண்மனையின் சிறப்பு அம்சங்கள் மற்றும் கலைநயம் ஆகியன குறித்து பார்வையிட்டு, அதன் சிறப்புக்களை அறிந்து கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.