மீன்பிடி திருவிழாவில் ஒருவருக்கும் கால் கிலோ அளவில் மட்டுமே மீன்கள் கிடைத்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மீன்பிடி திருவிழா
தென்மாவட்ட பகுதியில் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் என பல இடங்களில் பாரம்பரிய திருவிழாக்கள் அதிகளவு நடைபெறுகிறது. இதில் மின்பிடி திருவிழாவும் முக்கியமான ஒன்று. கிராமத்தில் இருக்கக்கூடிய கண்மாய்களில் தேதி குறிக்கப்பட்டு மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதற்காக முந்தைய ஆண்டே குல தெய்வங்களை வேண்டிக் கொண்டு ஊர் பெரியவர்களும், சொந்த கிராமத்தின் மக்களும் மீன் குஞ்சுகளை வளர்க்க விடுகின்றனர். பின்னர் மீன்குஞ்சுகள் வளர்ந்த பின், கிராமங்களுக்கு அறிவிப்பு சொல்லப்பட்டு மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் பாரம்பரியமாக நடைபெறும் தென்ணிலிவயல் கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மீன்பிடி திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
சிவகங்கை அருகே உள்ள தெண்ணலிவயல் என்ற பகுதியில் அமைந்துள்ள கண்மாயில் இன்று மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. அந்தப் பகுதியை சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகாலை 6:00 மணி முதல் மீன் பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள ஆர்வமுடன் வந்திருந்தனர்.
குறைந்தளவில் மீன்கள் கிடைத்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் கம்மாயில் மீன்கள் இல்லாததால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மீன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆண்டுகளில் மீன் பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோவிற்கு மேல் மீன்கள் கிடைத்த நிலையில் இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஒருவருக்கும் கால் கிலோ அளவில் மட்டுமே மீன்கள் கிடைத்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.